சிக்கலில் பாடகர் மனோ மகன்.. சின்ன பசங்களை முட்டி போட வைத்து.. உருட்டு கட்டையால் அடித்ததாக வழக்கு
சென்னை: பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன், குடிபோதையில் சிறுவர்களை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால பந்து பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற மனோ மகன் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. முட்டி போட வைத்து உருட்டு கட்டையால் தாக்கியதாக நேரில் கண்டவர்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 5 பேரில் ஒருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோவின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அவருடைய மகனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரஃபி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் ரஃபி தாக்கியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
பாடகர் மனோ, தமிழ், மலையாளம் , தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். சின்னத்தம்பி படத்தில் தூளியிலே பாடலுக்காக தமிழக அரசின் தேசிய விருதையும் பெற்றார். இவர் ஆந்திரா மாநிலத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பாபு. இவருக்கு மனோ என இளையராஜாதான் பெயர் மாற்றினார்.
இளையராஜாவின் இசையில் பூவிழி வாசலிலே படத்தில் அண்ணே அண்ணே பாடலை பாடினார். அதைத் தொடர்ந்து எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே, மதுரை மரிக்கொழுந்து வாசம், வேலைக்காரன் படத்தில் வேலையில்லாதவன், காதலன் படத்தில் முக்காலா, முத்து படத்தில் தில்லானா தில்லானா உள்ளிட்ட பாடல்களை மனோ பாடியுள்ளார். அதில் செண்பகமே பாடல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தெலுங்கு திரைப்படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் எஸ்.பி.பி. ஒரு பாடல் பாட வேண்டியதாக இருந்தது. ஆனால் அவரால் வர முடியவில்லை. இதனால் எம்எஸ்வியின் ஆர்கெஸ்ட்ராவில் இருந்த மனோவின் தந்தையின் நண்பர்தான் மனோவை எம்எஸ்விக்கு அறிமுகப்படுத்தினார். அதுதான் அவருக்கு கிடைத்த வாய்ப்பு.












Click it and Unblock the Notifications