பெங்களூர் - சென்னை வந்த ரயிலில்.. தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணியிடம் போலீஸ்காரர் செய்த செயல்
சென்னை: பெங்களூரில் இருந்து சென்னை வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண் பயணியிடம் இருந்து நகைப்பையை திருடிய போலீஸ்காரரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே நகைப்பையை திருடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் ரேணுகா (வயது 30). இவர் குடும்பத்தினருடன் பெங்களூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னை திரும்பினார். இதற்காக அவர்கள் காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் புக் செய்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.

குடும்பத்துடன் ரேணுகா ரயிலில் வந்துகொண்டிருந்த நிலையில், இரவு நேரம் ஆகிவிட்டதால் தூங்கியுள்ளார். அப்போது தலையில் நகைகள் அடங்கிய பையை வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் திடீரென அந்த பையை யாரோ எடுப்பது போல் தெரிந்திருக்கிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது வாலிபர் ஒருவர் அந்த நகைப்பையை எடுத்து வைத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பையை தருமாறு அவரிடம் கேட்டார். ஆனால் திருதிருவென விழித்த அந்த நபர் திடீரென பையை தூக்கி வெளியில் வீசிவிட்டார். திருமுல்லைவாயில் - அம்பத்தூர் இடையே ரயில் வந்துகொண்டிருந்த போது அவர் பையை ஓடும் ரயிலில் இருந்து வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்.
இதையடுத்து ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து அந்த நபரை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் அதிகாலை 4. 30 மணியளவில் வாலஜா ரயில் நிலையத்தில் ஏறியதும், அவர் ஒரு போலீஸ்காரர் என்பதும் தெரியவந்தது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பதும், ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
வசந்தகுமாருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். செம்பியம் போலீஸ் குடியிருப்பில் தான் தங்கி இருக்கிறார். கடந்த 21 ஆம் தேதி ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பும்போது தான் ஓடும் ரயிலில் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பயணிகள், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே பயணியிடம் இருந்து நகைப்பையை திருடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணின் அந்த பையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், மோதிரம், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறினர். இந்த சம்பவத்தால் அந்த ரயில் 15 நிமிடம் தாமதமாக சென்னை வந்தடைந்தது.












Click it and Unblock the Notifications