நாடாளுமன்றம் திறப்பு தேதியில் அரசியல் உள்நோக்கம்..சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்.அவரே சொன்ன விளக்கம்
சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சனாதன கொள்கைகளை தூக்கிப் பிடித்த சாவர்க்கரின் பிறந்த நாளில் திறப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விசிக நம்புவதாக அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் முதல் குடிமகன் அல்லது குடிமகள் குடியரசுத்தலைவர்தான். அரசமைப்பு சட்டப்பூர்வமான தலைவராக குடியரசுத்தலைவர்தான் விளங்குகிறார். நாடாளுமன்றத்தை கூட்டவும் கலைக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது. அப்படிப்பட்ட ஒருவரை அழைத்து திறந்து வைக்க கோரியிருக்க வேண்டும். அவர்தான் திறந்து வைத்து இருக்க வேண்டும். அதுதான் மரபு.

ஆனால் அதனை மீறி தன்னுடைய பெயரே நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆவலில் மோடி, அடிக்கல் நாட்டும் போது அன்றைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்கவில்லை. இன்றைய குடியரசுத்தலைவரையும் அழைக்கவில்லை. மக்களவை தலைவர் ஓம் பிர்லா முன்னிறுத்தி நடைபெறும் இந்த விழாவில், மாநிலங்களவை தலைவராகவும் இருக்கும் துணைக் குடியரசுத்தலைவரை ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் இருவருக்குமே இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ், திமுக உள்பட 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்து இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி மேலும் கூடுதலாக கருப்பு நாளாக கடைபிடிக்கிறோம். இன்று தமிழ்நாடு முழுவதும் இல்லங்கள் தோறும் கருப்புக்கொடி ஏற்றுகிறோம்.
எல்லோரும் கருப்பு சட்டைகளை உடுத்துகிறோம். ஏனெனில், மே 28 ஆம் தேதி தேர்வு செய்ததில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நம்புகிறோம். மே 28 ஆம் தேதி அவர்களின் சனாதன அரசியலின் கொள்கை குரு சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள் என்று தெரியவருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். அரசியல் அமைப்பு சட்டம் முன்மொழிக சுதந்திரம், சமத்துவம் உள்ளிட்ட கோட்பாடுகளுக்கு எதிரானவர்.
சனாதன பாசிசத்தை இந்த மண்ணில் நிலைநாட்ட வேண்டும் என்று துடித்தவர். மதசார்பின்மை கோட்பாட்டில் உடன்பாடு இல்லாதவர். அத்தகைய ஒருவரை தங்களின் தேசிய தலைவர், ஆசான் என பாஜக , ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தூக்கி பிடிக்கின்றன. அவரின் பிறந்த நாளை தேர்வு செய்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதில் உள்நோக்கம் இருப்பதாக விசிக கருதுவதால் நாளைய (இன்றைய) தினத்தை கருப்பு நாளாக அல்லது துக்க நாளாக கடைபிடிக்கிறோம். ஜனநாயக மரபுகளை சிதைக்கும் இத்தகைய போக்குகளை விசிக கண்டிக்கிறது.
கமல்ஹாசன் தன்னுடைய நிலைப்பாடை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அவர் இந்த 19 கட்சிகளையும் மறுபரிசீலனை செயய் வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதன் மூலம் சனாதன சக்திகளின் சூதுக்கு சூழ்ச்சிக்கு இணங்கி போகிறார் அல்லது பழியாகிறார் என்று கருத வேண்டியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications