பவர் டெஸ்ட்.. 3 தொகுதி ரிசல்ட்.. விஜய்யின் செல்வாக்கு தொடருமா? தவெகவுக்கு வந்த சோதனை
சென்னை: ஒரு தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயம்தான்.. ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களிலும் அதே வெற்றியைத் தக்கவைப்பதுதான் அதைவிட பெரிய சவால்... அதுபோலத்தான் இப்போது தமிழக அரசியலில் தவெகவுக்கும், விஜய்க்கும் அப்படியொரு சோதனை வந்திருக்கிறது.. 3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலுக்கு உணர்த்தப்போவது என்ன? தவெக வென்றது ஏதோ ஒருமுறை அதிசயமா, அல்லது விஜய்க்கு மக்கள் ஆதரவு தொடர்கிறதா? கட்சி தாவினாலும் மக்கள் ஆதரிப்பார்களா? இதுபோன்ற பல கேள்விகளுக்கும் இன்றைய ரிசல்ட் பதிலளிக்க போகிறது...!!!
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைக்க முடியுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி..

மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய்யின் கவர்ச்சி குறைந்து வருகிறது.. சென்னையிலிருந்து தனி விமானம், கோவையில் பிரைவேட் ஜெட், அங்கிருந்து ஹெலிகாப்டர், பின்னர் மாட்டுவண்டியில் சென்று விஜய் வாக்கு கேட்கிறார் என்றால், இந்த 4 மாத காலத்திற்குள் தவெக அரசின் பயத்தைதான் காட்டுகிறது.. எனவே, கடந்த தேர்தல் வெற்றியை மட்டும் நம்பியிருக்காமல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி உழைத்தால்தான் அடுத்தடுத்த வெற்றிகளை தவெகவால் பெற முடியும்" என்கிறார்.
இது அவருடைய அரசியல் பார்வைதான் என்றாலும், தலைவரின் கவர்ச்சி மட்டுமே போதுமா, கட்சியின் அடிமட்டக் கட்டமைப்பும் வலுவாக இருக்க வேண்டாமா என்ற கேள்வி முக்கியமானது..
குறைந்த வாக்குப்பதிவு - தவெகவுக்கு வார்னிங்?
சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதுராந்தகத்தில் 93.22%, தாராபுரத்தில் 89.89% வாக்குகள் பதிவாகின. ஆனால், இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 85.99%, தாராபுரத்தில் 80.31% மட்டுமே பதிவாகியுள்ளன. இது முறையே 7.23, 9.58 சதவீதப் புள்ளிகள் சரிவு.
பொதுத்தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு இளைஞர்கள், மாணவர்களின் ஆதரவும் ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. இப்போது அவர்களது வாக்குப்பதிவு ஆர்வம் குறைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வாக்குப்பதிவு சரிந்ததாலேயே தவெகவின் ஆதரவு குறைந்துவிட்டது என்றும் சொல்லிவிட முடியாது.
எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தெரியவரும்.. ஆனால், வாக்களிக்க வராதவர்கள் யாருக்கு வாக்களித்திருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது
அதிமுகவில் வென்றவர்களே தவெக வேட்பாளர்கள்
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் முன்பு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அதே வேட்பாளர்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இப்போது தவெக சார்பில் போட்டியிடுகின்றனர். எனவே, கட்சி மாறிய பிறகும் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்களா, வேட்பாளரைப் பார்த்து வாக்களிக்கிறார்களா அல்லது கட்சியைப் பார்த்து வாக்களிக்கிறார்களா என்பதும் இந்த தேர்தலில் முக்கியமான கேள்வி.
ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால் அது வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்காலா, தவெகவின் ஆதரவாலா என்பதையும் வாக்கு விவரங்களுடன் ஆராய வேண்டியுள்ளது... தோல்வியடைந்தாலும் கட்சி மாறியதுதான் காரணம் என்று மட்டும் சொல்ல முடியாது. உள்ளூர் பிரச்சனைகளும் வேட்பாளரின் செயல்பாடுகளும் முடிவை தீர்மானிக்கலாம்.. இதனாலும் 2 தொகுதிகளிலும் வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கலாம் என்ற கணிப்புகளும் உள்ளன..
திமுக, அதிமுக
இந்த இடைத்தேர்தல் தவெகவுக்கு மட்டுமல்ல, திமுக, அதிமுகவுக்கும் முக்கியமானது. தவெக வெற்றி பெற்றால், பொதுத்தேர்தலுக்குப் பிறகும் விஜய்க்கான ஆதரவு தொடர்வதற்கான அறிகுறியாக இருக்கும். ஆனால், தோல்வி ஏற்பட்டால் மட்டும் மக்கள் ஆதரவு குறைந்துவிட்டது என்று முடிவெடுக்க முடியாது. அதேபோல், வெற்றி பெற்றுவிட்டால் ஆதரவு நிரந்தரமாகிவிட்டது என்றும் சொல்ல முடியாது.
திமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்திருக்கிறதா, அதிமுகவின் ஆதரவாளர்கள் கட்சி மாறிய வேட்பாளர்களை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதும் தெரியவரும். இந்த முடிவுகள் தமிழக அரசியலின் அடுத்தகட்ட வியூகங்களுக்கு முக்கியமான அறிகுறிகளைக் கொடுக்கலாம். இருப்பினும், சில தொகுதிகளின் முடிவுகளை வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையையும் தீர்மானித்துவிட முடியாது..
ஆக, இந்த 3 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவின் வெற்றி தொடர்கிறதா, விஜய்க்கான மக்கள் ஆதரவு நீடிக்கிறதா, கட்சி மாறிய வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதற்கான அரசியல் அறிகுறிகளைக் கொடுக்கலாம்.. அதேநேரம், சில தொகுதிகளின் முடிவுகளை வைத்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையையும் தீர்மானித்துவிட முடியாது. வாக்கு சதவீதம், வெற்றி வித்தியாசம், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகள் என அனைத்தையும் சேர்த்து பார்த்தால்தான் தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்..!!


Click it and Unblock the Notifications
