பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில் 54.40 லட்சம் ரூபாய் அளவுக்கு நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை நிலை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இந்திரா வீட்டு வசதித் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசால் செயல்படுத்தப்படும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் வீடு வாங்க, மானியம் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின்கீழ் கட்டித்தரப்படும் வீடுகளில் பாத்ரூம் வசதி, கரண்ட் வசதி, குடிநீர் வசதி, எல்பிஜி சிலிண்டர் உள்பட பல வசதிகள் தரப்படும்..

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாக உள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.1.5 லட்சமும், கடைசியாக அதாவது மூன்றாவது தவணையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். மேலும், சாதாரண வங்கிகளில் இருந்து கிடைக்கும் வீட்டுக் கடனை விட, கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ், சென்னையை அடுத்த சோழவரம் பகுதியில் பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கியதில் 54 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, சோழவரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை வீடு கட்டாதவர்களுக்கும், தகுதியில்லாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி, தவறிழைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் புகார் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நலத்திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையா? புகார் அளித்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications