"விஜய பிரபாகரனிடம் நீதான் எனக்கு சீனியர்னு சொன்னாரு விஜய்”.. என்ன நடந்தது? பிரேமலதா ஓபன் டாக்!
சென்னை: விஜய் நடிப்பில் 'கோட்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கோட் பட இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய் உள்ளிட்டோர் பிரேமலதா வீட்டுக்குச் சென்று சந்தித்தனர். விஜய் அரசியல் பயணம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்தச் சந்திப்பு பரபரப்பைக் கிளப்பியது. விஜய் உடனான சந்திப்பில் என்ன நடந்தது என விளக்கி உள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'கோட்' படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக இப்படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த்தை பயன்படுத்த தன்னிடம் வெங்கட் பிரபு அனுமதி கேட்டதாக தே.மு.தி.க பொதுச்செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் கோட் படத்தில் விஜயகாந்த் சில காட்சிகள் வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.
விஜய்யின் 'கோட்' திரைப்படத்தில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தை 'ஏஐ' தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளதை அண்மையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு உறுதி செய்திருந்தார்.
இந்த நிலையில் விஜய், பிரேமலதா விஜயகாந்தை அண்மையில் நேரில் சந்துத்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்ற விஜய், தயாரிப்பார் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் சந்தித்தனர். விஜயகாந்தின் உருவப்படத்துக்கும் நடிகர் விஜய் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது விஜய் சந்தித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரேமலதா, "எங்கள் வீட்டுக்கு அருகில் தான் விஜய் பல ஆண்டுகாலம் வசித்தார். கேப்டனுக்கும் எஸ்.ஏ.சிக்கும் உள்ள நட்பு உலகத்துக்கே தெரியும். விஜய் எங்கள் வீட்டுக்கு வருவது புதிது அல்ல.
விஜய் பல முறை எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். எங்கள் வீட்டுப் பிள்ளை அவர். விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியனோடு ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். எனது மகன் சண்முகப்பாண்டியன், விஜய்யிடம் நீங்கள் தான் எங்களுக்கு சினிமாவில் ரோல் மாடல் எனக் கூறினார். அதற்கு விஜய் விஜய பிரபாகரனை பார்த்து அரசியலில் நீ தான் எனக்கு சீனியர், சிறப்பாக பேசுகிறாய், செய்தியாளர்களின் கேள்விகளை நன்றாக எதிர்கொள்கிறாய் எனக் கூறி வாழ்த்தினார்.
'கோட்' திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் AI-யில் வருகிறார். படம் ரிலீஸான பிறகு குடும்பத்தோடு வந்து படம் பார்க்க வேண்டும் என அழைத்தனர். படத்தில் கேப்டன் விஜயகாந்த் வரும் இடம் ரொம்ப பிரமாண்டமாக வந்திருப்பதாக விஜய் கூறினார்." எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா.
விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அண்மையில் அறிமுகம் செய்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்தை, விஜய் சந்தித்தது அரசியல் கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என்று பலரும் விவாதித்தது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்தின் படத்தில் சிறுவயதில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய விஜய், விஜயகாந்த் நிறுவிய கட்சியுடனே கூட்டணி அமைத்து அரசியல் பயணத்தையும் தொடங்குவாரா என விவாதிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications