கடலூர் மாநாட்டிற்கு வாங்க... கரூர் மாதிரி நடக்காது.. பாதுகாப்பா அனுப்பி வைப்போம் - பிரேமலதா
சென்னை: "ஜனவரி 9 கடலூர்ல மாநாடு இருக்கு... அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்; கரூர்ல நடந்தமாதிரி நடக்காது; உங்களை நாங்க உபசரிச்சு, பாதுகாப்பா கவனிச்சு வீடு சென்று சேரும்வரை அத்தனையும் செய்வோம்" என தருமபுரியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியுள்ளார்.
2026இல் புனிதமான ஆட்சியை கொண்டு வருவதுதான் நமது நோக்கம். ஆண்டவர்களும், ஆட்சியாளர்களும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றனர் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, என். ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசியலில் நடக்கும் விவகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். கரூர் சம்பவத்திற்கு தமிழக அரசும், விஜய்யும் பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்கள், யாருக்காக வந்தார்கள்? உங்களை பார்க்க தான் வந்தார்கள். அப்படியென்றால் யார் பொறுப்பு? நிச்சயமாக பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் விஜய் நேரில் சென்று சந்திக்க வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நீங்கள் அறிவித்த நிவாரணத் தொகையை நேரில் கொடுக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 41 உயிருக்கும் தமிழக அரசும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியும் பொறுப்பேற்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இன்று தருமபுரியில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "ஜனவரி 9 கடலூரில் தேமுதிக மாநாடு இருக்கிறது. அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்; கரூரில் நடந்தமாதிரி நடக்காது; உங்களை நாங்க உபசரிச்சு, பாதுகாப்பா கவனிச்சு வீடு சென்று சேரும் வரை அத்தனையும் செய்வோம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications