அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டதில் தவறில்லை.. பிரேமலதா விஜயகாந்த் ஒரேபோடு
சென்னை: ஜிஎஸ்டி பற்றி பேசிய அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிர்மலா சீதாராமன் மற்றும் தொழிலதிபர்களிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசியபோது, “ உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ என்று வானதி சீனிவாசனைக் குறிப்பிட்டு எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க. ஜிலேபி சாப்பிடுவாங்க. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி.

ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வித்தியாச வித்தியாசமான ஜிஎஸ்டி போடுவதால் மக்கள் சண்டைக்கு வருகிறார்கள். பன்னுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அதற்குள் க்ரீம் வைத்தால் 18% ஜிஎஸ்டி வருகிறது. குறைத்தால் எல்லாவற்றிற்கும் குறையுங்கள். தயவுசெய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது.” என்று கூறினார்.
அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் பாஜகவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா நடைபெற்றது. விழாவில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கேப்டன் இல்லம் என்கின்ற பெயர் பலகையைத் திறந்துவைத்தார். தொடர்ந்து, டிஜிட்டல் மூலமாக இலவச மருத்துவ முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா கூறுகையில், தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்றுதல், நலத்திட்ட உதவிகளை வழங்குதல் என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விஜயகாந்துக்கு பத்மபூஷம் விருது, அவரது 72 ஆவது பிறந்த நாள் விழா, தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழாவாக அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடவுள்ளோம். கேப்டன் இல்லாத கட்சியின் துவக்க நாள் என்றார்.
அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான கேள்விக்கு, சிறு தொழிலாக இருந்தாலும், பெரிய தொழிலாக இருந்தாலும் ஜிஎஸ்டி பிரச்னை கேள்விக் குறியாகவே உள்ளது. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஜிஎஸ்டி கொண்டு வந்த பிறகு அனைவரது வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.
ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் தனது கருத்தை எடுத்துக் கூறியுள்ளார். அவர் யதார்த்தமாகவே பேசியுள்ளார். அதில் எந்த உள்நோக்கம் மற்றும் அவர்களை அவமதிக்கும் நோக்கில் பேசியது போல எனக்குத் தெரியவில்லை. நிதித்துறை அமைச்சரும் அந்த விஷயத்தை சாதாரணமாக ஏற்றுக் கொண்டார். ஆனால், ஊடகங்கள் இப்பிரச்னையை பெரிய விஷயமாக்கியதால் அன்னபூர்ணா உரிமையாளரே தானாக முன்வந்து, அனுமதி கேட்டு சந்தித்ததாக நான் கேள்விப்பட்டேன்.
நாம் தவறாகப் பேசும்போது மன்னிப்பு கேட்பதென்பது சகஜம். அதைத்தான் சீனிவாசனும் செய்துள்ளார். இந்த விஷயத்தை திமுகவும், காங்கிரஸும், மற்ற கட்சிகளும் ஏன் பூதாகரமாக்குகிறார்கள் எனத் தெரியவில்லை. இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அதேபோல, மகாவிஷ்ணு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் மிரட்டும் வதகையில் பேசியதற்கு ஏன் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதுவும் அவமரியாதை தான் என்றார்.












Click it and Unblock the Notifications