திரும்ப.. திரும்ப அதையே கேட்குறீங்க.. கூட்டணி குறித்த கேள்வி.. பிரேமலதா அப்செட்
சென்னை: அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் கவுன்ட் டவுனுக்கு தயாராகிவிட்டன. இதில் தேமுதிக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிரேமலதா சற்று சலிப்புடன் பதில் சொல்லியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் களத்துக்கான முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே வியூகங்களை வகுக்க தொடங்கிவிட்டனர். தற்போதுவரை திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுவோம் என அறிவித்துள்ளனர். தேமுதிக, தவெக கட்சிகள் இன்னும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
தேமுதிக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த நிலையில், இந்த வருடம் அவர்கள் எதிர்பார்த்த ராஜ்சபா எம்பி கிடைக்கவில்லை. இதையடுத்து தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா அல்லது வேறு கூட்டணியில் இணைவார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தீவிர ஆலோசனையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "நான் கூட்டணி குறித்து பலமுறை தெளிவாக விளக்கமளித்தும், நீங்கள் மீண்டும் மீண்டும் கூட்டணி குறித்தே கேட்கிறீர்கள். அதனால் தான் நான் பதில் சொல்வதை தவிர்க்கிறேன். என்னை போல செய்தியாளர்களிடம் அனுசரித்து செல்வது யார். உங்களிடம் நான் அன்பாக பேசுகிறேன். நீங்கள் ஒரே கேள்வியை தான் மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள்.
கூட்டணி குறித்து நான் பலமுறை பதில் அளித்தாலும் மறுபடியும் அதைப்பற்றியே கேட்கின்றீர்கள். எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் என்பதையும் பலமுறை சொல்லிவிட்டேன். இப்போது எங்கள் கட்சியை மேம்படுத்துவதில் தான் நாங்கள் முழு கவனம் செலுத்தி வருகிறேன். நேரம் வரும்போது யாருடன் கூட்டணி, எவ்வளவு தொகுதி, வேட்பாளர் பட்டியல் அனைத்தையும் உங்களிடம் பகிர்வேன்.
எல்லாம் இறுதியானவுடன் உங்களிடம் சொல்லாமல் நான் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன். முதலில் உங்களை அழைத்துதான் சொல்வோம். அதில் மாற்றம் கிடையாது. கூட்டணிப் பற்றிய கேள்வி இப்போது வேண்டாம். அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் நீங்களும் அதுதொடர்பான கேள்வியை தவிர்த்து விடுங்கள்.
நாங்கள் எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதை சொல்ல நேரம் வேண்டும் என்று கேட்டுள்ளோம். அடுத்த 6 மாதங்கள் முழுக்க எங்களின் கட்சிப் பணியில் தான் கவனம் செலுத்த போகிறோம். 2026 ஜனவரி 9 கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. எங்கள் கட்சிப் பணிகளை முடித்து மாநாடை சந்திக்கும்போது உங்களுக்கு அனைத்தையும் தெளிவுபடுத்திவிடுவேன்.
ஒரு வார்த்தையை சொல்வதற்கு முன்பு பலமுறை யோசித்து பொறுமையாக தான் சொல்வேன். அதைத்தான் பொறுத்தார் பூமி ஆழ்வார். பொறுமை கடலினும் பெரிது என்று கூறினேன். அதனால் கால அவகாசம் தேவைப்படுகிறது. முருகர் பக்தர் மாநாட்டுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. கேப்டன் இல்லாத ஒவ்வொரு நாளும் எங்கள் அனைவருக்கும் கடினமான காலமாக பார்க்கிறோம்.
தேர்தலுக்காக மட்டுமல்ல, நாங்கள் வாழ்ந்த வகையில் அவரின் நினைவு எங்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. தலைவர் இல்லாமல் இந்த தேர்தலை சந்திப்பது வருத்தமாக இருந்தாலும், அவரின் லட்சியத்தை வென்றெடுப்போம். வெற்றிக்கனியை அவரின் காலடியில் சமர்பிப்போம் என்ற ஒரே குறிக்கோளில் கட்சிப் பணிகளை செய்து வருகிறோம். தெய்வம் மற்றும் தலைவரின் ஆசியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications