"பிரியா ம்மா.. என் சாமி.. கண்ணை தொறந்து பாருடி.. போகாத பிரியா.. ஐயோ, ஊசியா குத்துனாங்களே.. ஒரே கதறல்
பிரியாவின் சடலத்தை கண்டு அவரது தோழிகள் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது
சென்னை: இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம், அவரது குடும்பத்தினரையும், தோழிகளையும் நிலைகுலைய வைத்து வருகிறது... இறுதிசடங்கின்போது, ஒரு தோழி மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயது மகள் பிரியாவுக்கு, கால்பந்து மீது தனி ஆர்வம் இருந்தது.. ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தி வந்தார்.
அதனாலேயே, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் இவருக்கு நிறைய கிடைத்தன.. இந்த சூழலில் பிரியா மூட்டு வலி பிரச்சினையால் அதிப்படவும், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அட்வைஸ்
அப்போது, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியிருப்பதாக டாக்டர்கள் சொல்லியதுடன், ஆபரேஷனும் செய்ய வேண்டும் என்று அட்வைஸ் தந்துள்ளனர்.. அதன்படியே ஆபரேஷன் செய்து முடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வீக்கம் ஏற்பட்டது. இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.. ஆனாலும் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டதையடுத்து, வலது கால் அகற்றப்பட்டது... எனினும், தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, இன்று காலை திடீரென உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினர் மற்றும் தோழிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அய்யோ பிரியா
பிரியாவின் சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்களும், தோழிகளும் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினர்.. இழப்பீடு, டாக்டர்கள் சஸ்பெண்ட் வரை அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தும்கூட, பிரியாவின் உறவினர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.. அப்போது, பிரியாவின் அத்தை, ஆஸ்பத்திரி வாசலிலேயே தலையில் அடித்து கொண்டு கதறி கதறி அழுதார்..
அந்த ஹாஸ்பிடல்ல கால எடுத்தாங்க.. இந்த ஹாஸ்பிடல்ல உயிரையே எடுத்துட்டாங்களே.. கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரின்னு நம்பி வந்தோமே.. 17 வயசுதான் ஆகுது..

ஜவ்வு கிழிஞ்சது
முட்டியில் சின்னதா ஜவ்வு கிழிஞ்சதுன்னு சொன்னாங்க.. சனிக்கிழமை சேர்த்தோம்.. திங்கட்கிழமை ஆபரேஷன்னு சொன்னங்க.. தப்பான ஆபரேஷனை பண்ணிட்டாங்களே.. குழந்தை வலியால் துடிச்சிட்டே இருந்தாள்.. அவள் அழும்போதெல்லாம் ஊசியை போட்டாங்களே.. யாரும், அரசியல் பேசாதீங்க, உயிரே போயிடுச்சு..." என்று தலையில் அடித்து கொண்டு அழுதார். பிரியாவின் சடலத்தை பார்த்த தோழிகள், "அய்யோ..! கண்ண தொறந்து பாருடி பிரியா.. எங்களை விட்டுட்டு போகாதே..டி என்று கதறி அழுதபடியே ஆம்புலன்ஸ் பின் ஓடி வந்தனர்.. அதைவிட கொடுமை, இறுதிச்சடங்கின்போது, ஒரு மாணவி அங்கேயே மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது..!!

ஸ்டேட்டஸ்
இதனிடையே, மாணவியின் இறப்பு விவகாரம் அரசியலாக்கப்பட்டும் வருகிறது.. பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களும், கேள்விகளும் எழுந்தபடியே உள்ளன.. வீராங்கனை பிரியா மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டும்கூட, சோஷியல் மீடியா முழுவதும், மாணவியின் மரண செய்தி ஆக்கிரமித்து வருகிறது.. அத்துடன் அவர் கடைசியாக வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களையும் பிரியாவின் தோழிகள் பகிர்ந்து வருகிறார்கள்.. இப்போது, மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிழிந்த ஜவ்வு
ஐயோ.. 4 ஆபரேஷன் பண்ணியும் என் குழந்தை போயிட்டாளே.. ஒரு ஜவ்வு கிழிஞ்சதுக்கு 4 ஆபரேஷனா.. கிட்னி ஃபெயிலியர்னு சொல்றாங்களே.. கால் வலின்னு போனவளுக்கு கிட்னி பெயிலியரா.. ஒன்னுமே புரியலயே என்று உறவினர்கள் தலையில் அடித்து கொண்டு அழுதனர்.. பிரியாவின் தோழிகள், சடலத்தை பார்த்து, 'இனிமே யார்கூட விளையாடுவோம்.. நீதானேடி எங்களுக்கு விளையாட கத்து குடுத்தே.. வாடி பிரியா.. ஃபுட்பால் விளையாடலாம்" என்று தேம்பி தேம்பி அழுதபடியே சொன்னார்கள்.. இதனிடையே, பிரியாவின் இறுதிசடங்கு முடிவடையும் நிலையில், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவரது வீட்டிலிருந்து உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இன்று மாலை 6 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications