விஜயகாந்தும் ராவுத்தரும் கணவன் - மனைவி மாதிரி! சண்டை வந்தாலும் சமாதானம் ஆகிடுவாங்க! பிரபலம் தகவல்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் இப்ராஹிம் ராவுத்தருக்கும் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லை. அவர்கள் சண்டை போட்டுக் கூட நான் பார்த்ததில்லை என தயாரிப்பாளர் சுப்பையா தெரிவித்துள்ளார். இவர் பெரியண்ணா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.
விஜயகாந்துடனான நட்பு குறித்து தயாரிப்பாளரும் அவருடைய உதவியாளராக இருந்த சுப்பையா டூரிங் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், இப்ராஹிம் ராவுத்தரும் விஜயகாந்தும் இதுவரை சண்டை போட்டது போல் நான் பார்த்ததில்லை.

இருவரும் சிரித்து சிரித்து பேசி மகிழ்வார்கள். ஒரு முறை ராவுத்தரும் விஜயகாந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தரிடம், "ஏம்ப்பா அந்த ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் உனக்கு நண்பர்தானே! அவர்கிட்ட கேட்டு எனக்கு ஒரு ரிவால்வர் வாங்கிக் கொடு" என கேட்டார்.
அதற்கு ராவுத்தர், "ஏம்ப்பா, சாப்பாட்டில் சமையல்காரர் உப்பு போடாவிட்டால் சுட்டுவிட போறீயா" என கேட்க இருவரும் அப்படி சிரித்துக் கொண்டார்கள். விஜயகாந்த், ராவுத்தர் கன்ட்ரோலில் இருந்தார். இருவரும் மனஸ்தாபமே வராது. மகிழ்ச்சி வந்தால் போதும் இருவரும் கணவன்- மனைவி போல் அடிக்கடி கட்டி பிடித்துக் கொண்டு அன்பை வெளிப்படுத்திக் கொள்வர்.
திருமணம் கூட முதலில் ராவுத்தர், விஜயகாந்த், பிறகு நான் (சுப்பையா) என்ற வரிசைப்படிதான் செய்து கொள்வதாக இருந்தது என்றார். மேலும் விஜயகாந்துக்கு பெண் பார்க்கச் சென்ற போது அவர் வரவேயில்லை என்ற சுவாரஸ்யமான தகவலையும் அவர் சொல்லியுள்ளார்.
விஜயகாந்தின் படங்கள் ஓடினாலும் பெரிய அளவில் மகிழ மாட்டார், ஓடாமல் போனாலும் உடைந்து போக மாட்டார். சாப்பாடு விஷயத்திலும் இதுதான் வேண்டும். அதுதான் வேண்டும் என்றில்லை. எல்லோருக்கும் என்ன சாப்பாடோ அதைதான் சாப்பிடுவார்.
பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு ஷூட்டிங்கிற்கு சென்றால் அந்த ஊரில் என்ன ஸ்பெஷலோ அதை சாப்பிடுவார். ஒரு முறை ஷூட்டிங்கில் இருந்த போது பிரேமலதாவுக்கு மகன் (விஜய பிரபாகரன்) பிறந்துள்ளார் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. உடனே ஒரு கடைக்கு சென்று அங்கிருந்த சர்க்கரையை அள்ளிக் கொண்டு (கடைக்காரரிடம் கேட்காமலேயே காசு கொடுக்காமலேயே) சென்றேன்.
விஜயகாந்திடம் வாயை திறங்கண்ணே என்றேன். அவர் "என்னடா" என்றார். திறங்கண்ணே சொல்றேன் என கூறிவிட்டு வாயில் சர்க்கரையை கொட்டி உங்களுக்கு மகன் பிறந்துள்ளான் என்றேன். விஜயகாந்த் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அது போல் விஜயகாந்த் மனமுடைந்தார் என்றால் அது அந்த தேமுதிக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த போதுதான் விஜயகாந்த் உடைந்து போய்விட்டார். இவ்வாறு சுப்பையா தெரிவித்தார்.
விஜயகாந்த் அரசியல்வாதி, தயாரிப்பாளர், நடிகர் எல்லாவற்றையும் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர். மனிதநேயம் மிக்கவர். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அதை சரியாக உள்வாங்கிக் கொண்டு தனது அலுவலகத்திற்கு வருவோருக்கென அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்.












Click it and Unblock the Notifications