சர்ருன்னு போன மஞ்சள் வேன்.. துரத்தி பிடித்த பறக்கும்படை.. உள்ள பார்த்தா கோடி கோடியா பணம் .. யாரோடது
சென்னை: சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையில்.. புதுச்சேரியில் நேற்று போலீசாரால் பிடிக்கப்பட்ட மஞ்சள் நிற வாகனம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுக்க பறக்கும்படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் தீவிரமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தெருவுக்கு தெரு பறக்கும்படையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

புதுச்சேரி
இந்த நிலையில் நேற்று புதுச்சேரியில் இதேபோல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். இதில் புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே பறக்கும்படையினர் சோதனை செய்து கொண்டு இருந்த போது அங்கு ஒரு மஞ்சள் நிற வேன் வேகமாக சென்றுள்ளது. போலீசார் சோதனை செய்த பக்கம் செல்லாமல் வேறு வழியாக இந்த வேன் சென்றதை பறக்கும்படையினர் பார்த்துள்ளனர்.

சந்தேகம்
இந்த வேன் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் சந்தேகம் அடைந்து.. அதை துரத்தி சென்றுள்ளனர். சில மீட்டர்கள் சென்ற பின் அந்த மஞ்சள் வேனை மடக்கி பிடித்து.. உள்ளே சோதனை செய்துள்ளனர். உள்ளே சோதனை செய்தால் அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்துள்ளன.

பணம்
இதையடுத்து அந்த பணத்தை எண்ணி பார்த்ததில் அதில் 2.5 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் எதுவும் அந்த வாகனத்தில் இல்லை. இதன்பின் அந்த வேன் ஓட்டுனர்களை பறக்கும்படையினர் பிடித்து விசாரித்தனர் .

ஆவணம் இல்லை
இது அருகில் இருக்கும் ஏடிஎம்மிற்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் இதில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. வங்கி விவரங்களும் இல்லை. இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

விசாரணை
இந்த பணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வங்கிப்பணம் என்றால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த ஆவணங்கள் இந்த வேனில் இல்லை. இதனால் சந்தேகத்தின் பெயரில் இந்த பணத்தை தற்போது வருமானவரித்துறையிடம் நிர்வாகிகள் ஒப்படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications