விஜயபாஸ்கரை விரட்டும் கேஸ்.. இன்று மனைவியுடன் வருவாரா? புதுக்கோட்டை கோர்டில் சொத்துக்குவிப்பு வழக்கு
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருக்கும் இவர், அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. ரூ.35.79 கோடியை இவர் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை இலுப்பூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல் குவாரிகள், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 210 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால், அப்போது விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அங்கு ஆஜரான விஜயபாஸ்கர் தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டு உள்ளதாகவும் அதை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் வாதிட்டார். இதனை அடுத்து வழக்கு குறித்த ஆவணங்களை விஜயபாஸ்கர் தரப்புக்கு முழுமையாக வழங்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
அதன்படி இந்த வழக்கு கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது மனைவி ரம்யா ஆஜராகவில்லை. அப்போது விஜயபாஸ்கர் தரப்புக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை நகல்களில், விடுபட்ட பக்கங்களைச் சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவகாசம் கோரினர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications