பேசாம ராஜினாமா செய்துட்டு மக்களிடமே போகட்டுமா? அந்த நேரத்தில் விஜய் அப்படி சொன்னதுமே அலறிய தவெகவினர்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நீடித்த நிலையில். விசிக ஆதரவு தெரிவிக்காத நடிகர் விஜய் கடும் மன உளைச்சலில் இருந்தாராம்.. அதுகுறித்த தகவரல்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.. "பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் மக்களிடமே போகலாம்" என்றெல்லாம் விஜய் தன்னுடைய நிர்வாகிகளிடம் மனம் வெதும்பி சொன்னாராம்.. தற்போது இந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்தாலும், கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள், புதிய பாடத்தை கற்பித்துள்ளது.
முதல்வர் பதவி ஏற்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்ததால், அவர் தனது கட்சி நிர்வாகிகளிடம் மிகுந்த விரக்தியுடன் பேசினாராம்.. மெஜாரிட்டிக்கு தேவையான இடங்கள் கைவசம் இல்லாத சூழலில், ஆட்சியே வேண்டாம் என்கிற முடிவுக்கும் விஜய் சென்றாராம்.. இது அவரது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பதவிக்காக காலில் விழ மாட்டேன்
"பதவிக்காக யாரிடமும் அடிமையாக இருக்க தான் விரும்பவில்லை, யாருடைய காலிலும் விழ தயாராக இல்லை. மீண்டும் மக்களிடமே சென்று முழு ஆதரவை கேட்பதுதான் சரியான வழி. எனக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று நம்பினேன். கொஞ்சம் குறைந்து விட்டது. என்னை போலவே ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட சிறு கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்தேன்.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள், பதவியை எதிர்பார்க்காமல் ஆதரவை தெரிவித்தனர். ஆதரவு தருவதாக வாக்களித்த திருமாவளவன், இன்னும் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை அடுக்குகிறார். ஸ்டாலின் ஆலோசனை கேட்டு செயல்படுகிறார்..
பதவி ராஜினாமா
அரசியல் பற்றி எனக்கும் தெரியும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு எதிராக இப்படி எல்லோரும் எனக்கு எதிராக அணி திரள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.. ஆட்சி அமைப்பதற்கு முன்பே ஆயிரம் நிபந்தனை விதிப்பவர்கள், பதவி பிரமாணம் எடுத்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அப்படி ஒரு ஆட்சி அமைக்கத்தான் வேண்டுமா? பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு, தமிழக மக்களிடமே திரும்ப போய், முழுசா ஆதரவு தாருங்கள் என்று கேட்டால் மறுக்கவா போகிறார்கள்? என்றெல்லாம் வேதனையில் சொன்னாராம்.
இதைக்கேட்டு பதறிப்போன அவருடைய ஆலோசகர்கள், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று விஜய்யை சமாதானப்படுத்தி உள்ளனர்.. "நமக்கு இன்னும் பல வழிகள் இருக்கு.. சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் கைவிடாது.. மற்ற கட்சிகளில் இருப்பவர்களே மனசாட்சிக்கு பயந்து வெளியில் இருந்து ஆதரவு வழங்க வாய்ப்புள்ளது" என்றெல்லாம் ஒரு தரப்பினர் சமாதானம் செய்தார்களாம்.
பதறிய தவெகவினர்
விஜய்யின் மற்றொரு தரப்பினரோ, "ஒன்றே முக்கால் கோடி மக்கள் அளித்த வாக்குகளை வீணடித்துவிடக்கூடாது, அப்படி ஒதுங்கினால் அந்த இடத்தைப் பிடிக்க எதிரிகள் காத்திருக்கிறார்கள், அந்த வலையில் விழுந்துவிட வேண்டாம்.. ஒருவேளை நமக்கு வேறு வழியே இல்லையென்றால், எதிரிகளே ஆட்சி அமைக்கட்டும், பலமான எதிர்க்கட்சித் தலைவராக உட்கார்ந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றலாம்" என்றார்களாம். இரு தரப்பிலுமே மாறி மாறி சமாதானம் செய்தும் விஜய் அமைதியாகவே இருந்தாராம்.
தற்போது இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன என்றாலும், சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகும், ஆட்சி அமைக்க இவ்வளவு பெரிய போராட்டத்தை விஜய் சந்திக்க வேண்டியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தி விட்டது..
கோட்டையை பிடிக்கும் விஜய்
பொதுவாக ஒரு கட்சி பெரும்பான்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கும்போது சிறிய கட்சிகள் தானாக முன்வந்து ஆதரவு தரும், ஆனால் விஜய்யின் விஷயத்தில் நிலைமை தலைகீழாக மாறியது..
ஜாதி, மத மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக அவர் எடுத்த உறுதியான நிலைப்பாடு, பாரம்பரிய அரசியல் கட்சிகளை அவருக்கு எதிராக ஒன்றிணைய வைத்தது.. இதனால்தான் அதிக சீட்கள் இருந்தும், ஆட்சியைக் கவிழ்க்கவும் முட்டுக்கட்டை போடவும் பின்னணியில் பலமான அரசியல் சதிவலைகள் பின்னப்பட்டன..
மெஜாரிட்டி பலம்
இப்போது அனைத்து நெருக்கடிகளும் நீங்கி விஜய் ஆட்சி அமைக்கப் போவது உறுதியாகிவிட்டாலும், கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளன.. மெஜாரிட்டி பலம் இருந்தும் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட இழுபறி, வரும் காலங்களில் கூட்டணி கட்சிகளை கையாள்வதில் அவர் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
குறிப்பாக, வெளியில் இருந்து ஆதரவு தரும் கட்சிகள் எந்த நேரத்திலும் நிபந்தனைகளை மாற்றி நெருக்கடி கொடுக்கலாம் என்பதால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு அடியையும் விஜய் மிக நிதானமாகவே எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.. எது எப்படியோ, இத்தனை தடைகளைத் தாண்டி அவர் சிம்மாசனத்தில் அமரப்போவது அவரது ஆதரவாளர்களிடையே புதிய உத்வேகத்தை தந்துள்ளது.. இனி நடக்க போவதை பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications