ரேபிஸ் மரணம் எப்படி இருக்கும்? நாயை போலவே மாறும் நோயாளிகள்.. எச்சரிக்கும் மருத்துவர்
சென்னை: தெருநாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் மரணம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில், ரேபிஸ் மரணம் எப்படி இருக்கும் என்பது குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அருணாச்சலம் முத்தையா ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்திருக்கிறார்.
பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, "ரேபிஸ் தாக்கப்பட்ட நாய் கடிக்கும் போது, அந்த வைரஸ் மனிதனின் உடலுக்குள் பரவுகிறது. நாய் கடித்துதான் பரவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதன் நகங்களை வைத்து பிராண்டும் போதும் அந்த வைரஸ் நம்முடைய தோலை கிழித்துக்கொண்டு உள்ளே நுழையலாம். தவிர உடலில் உள்ள காயங்கள் மீது நாய்களின் எச்சில் படும் பொழுதும் இந்த வைரஸ் உடலுக்குள் ஊடுருவுகிறது.

இது நேரடியாக மூளையை நோக்கி பயணித்து மூளையில் உள்ள திசுக்களை தின்கிறது. இதனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நபர் கோமாவுக்கு செல்கிறார். சிலர் மிகவும் ஆக்ரோஷமாக மாறுகிறார்கள். அதாவது தொண்டையில் உள்ள தசைகள் இறுகி விடுகிறது. எனவே தண்ணீர் குடிப்பதால் கடுமையான வலி ஏற்படும். வலி காரணமாக தண்ணீர் குடிக்கவே பயப்படுவார்கள். எச்சில் கூட விழுங்க கஷ்டப்பட்டு கொண்டு வாய் வழியாக அதை வெளியேற்றுவார்கள்.
இதைத்தான் சிலர் நாயை மாறியே மாறிவிட்டார்கள் என்று கூறுவது உண்டு. இறுதியில் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்து விடுவார்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் நாட்டு வைத்தியர்களிடம் இதற்கு சிலர் மருந்து எடுப்பதை பார்க்க முடிகிறது. நாட்டு வைத்தியத்தால் ரேபிஸ் கடி பாதிப்புகளை சரி செய்ய முடியாது. நாட்டு வைத்தியத்தில் தடுப்பூசி என்பதே கிடையாது. எனவே நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி எடுத்துக்கொள்வதே பாதுகாப்பானது.
தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக ரேபிஸ் வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் ரேபிஸ் தடுப்பூசி பரவலாக கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை அதிகமாக இருப்பதாக நோயாளிகள் நினைத்தால், மருத்துவமனை அமைந்திருக்கும் இடத்திலிருந்து அடுத்த இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அரசு மருத்துவமனையை கை காண்பித்து அங்கே சென்று இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தவிர யாருக்கும் தடுப்பூசி போட மாட்டோம் என்றோ அல்லது ஸ்டாக் இல்லை என்று சொல்வது கிடையாது.
இது ஒரு புறம் எனில் மறுபுறம் சாதாரண நாய் கடிக்கு கூட நாங்கள் ரேபிஸ் சிகிச்சை தான் அளிப்போம். சாதாரண நாய் கடியும் ரேபிஸ் தொற்று உள்ள நாய்களையும் நாங்கள் ஒரே விதமாக தான் பார்க்கிறோம்.
இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவெனில் தெரு நாய்கள் மட்டும் நகரத்தில் பிரச்சனை இல்லை. நகரத்தின் வீதிகளில் உலாவும் கால்நடைகள் அனைத்துமே மக்களுக்கு பிரச்சினைதான். இவை அனைத்தையும் நகரத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். நாய்கள் இனத்தையே முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல்கி பெரிய உள்ள இந்த இனத்தை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். எந்த விலை கொடுத்தாவது இதை செய்ய வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கையாக இருக்கிறது.
நாய்கள் ஒரு பக்கம் எனில், மாடுகள் தொல்லையும் கூட நமக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறது. சாலையில் செல்வோரை முட்டி தூக்கி வீசி குடல் தனியாக வெளியே வந்து விழுந்து பின்னர் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் எல்லாம் உண்டு. எனவே மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்தையும் நம் உடனடியாக நகரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
அதேபோல இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. நமக்கெல்லாம் தெரிந்தது நாய்க்கடி மட்டும் தான். ஆனால் நாயின் கழிவுகளாலும் கூட மிகுந்த ஆபத்து ஏற்படுகிறது. மழைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் திடீரென்று உயரும் போது நாய் கழிவுகள் நிலத்தடி நீரில் கலந்து, போர் வாட்டர்களில் மூலம் ஆர்.ஓ நீர் வழியாக மனிதன் உடலுக்குள் பரவுகிறது. இதனால் தேவையற்ற உடல் நலம் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இது குறித்தும் நாம் விரிவாக பேச வேண்டியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications