சட்டசபை விதியை மீறிய ராஜ் பவன்.. அவைக்குறிப்பில் இருந்து நீக்கிய ஆளுநர் பேச்சு வீடியோவாக வெளியீடு!
சென்னை: அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிடக்கூடாது என சட்டமன்ற விதி இருக்கும் நிலையில், இன்று தமிழக சட்டசபை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பேச்சை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.
2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி தொடங்கும்போதும் முடியும்போதும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற எனது தொடர் புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் உரையின் பல பகுதிகளை ஏற்க முடியாது எனத் தெரிவித்து, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு அமர்ந்தார்.

ஆளுநர் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்: அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்திருப்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறை. ஆளுநர், அரசின் உரையை வாசிக்காமல் அமர்ந்த நிலையில் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் பின்னர், அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும், ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
அவை நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதன் பின்னர் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. தமிழக அரசின் உரையில் உள்ள கருத்துகளைத் தவிர்த்து சட்டப்பேரவையில் ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
வீடியோவாக வெளியிட்ட ராஜ் பவன்: ஆளுநர் ரவி, உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளியேறியதும், ஆளுநர் பேசிய விஷயங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தமிழக ஆளுநர் மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில், இன்று சட்டசபையில் ஆளுநர் பேசியது வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் பேசியதை சப்-டைட்டிலுடன் வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.
அவை உரிமை மீறல்: அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியை வீடியோவாக ஆளுநர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை வெளியிடக்கூடாது என்பது சட்டமன்ற விதி. அதை மீறி பத்திரிகை, ஊடகங்களில் வெளியிட்டால் அது அவை உரிமை மீறலாகக் கருதப்படும். இந்நிலையில், அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பேச்சை, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஆளுநர் மாளிகையின் விளக்கம்: மேலும், இன்று ஆளுநர் உரையை புறக்கணித்தது தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஆளுநரின் உரையின் வரைவு அறிக்கையை, அரசிடமிருந்து கடந்த 9-ம் தேதி ராஜ்பவன் பெற்றது. அதில், உண்மையற்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அப்போது, ஆளுநர் உரை விவகாரத்தில் என்னென்ன விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனையை ஆளுநர் வழங்கினார்.
முதலில், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இரண்டாவதாக, ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டப்பட்டதற்கான காரணங்களை பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும்.
ஆளுநர் இவ்வாறு ஆலோசனை அளித்திருந்தும், ஆளுநரின் ஆலோசனையை அரசு புறக்கணித்தது. இந்நிலையில், ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் அவையில் உரையாற்றினார். அவர் தனது உரையில், சபாநாயகர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738-வது குறளுடன் முதல் பத்தியை படித்தார். அதன்பிறகு ஆளுநர், தவறான தகவல்கள் மற்றும் கூற்றுகளுடன் ஏராளமான பத்திகள் இருந்ததால் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆளுநர் உரையை படிக்க தன்னால் இயலவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.
மேலும், தமிழக மக்களின் நலனுக்காக இந்த சட்டப்பேரவை அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாகவும் கூறி ஆளுநர் தனது உரையை முடித்தார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாகப் பேசினார்.
நாதுராம் கோட்சே மற்றும் பலரை ஆளுநர் பின்பற்றுவதாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார். சபாநாயகர், ஆளுநருக்கு எதிராகக் கடுமையாகத் தாக்கியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்" என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications