விஐபிக்கள் வாழும் ராஜா அண்ணாமலைபுரம் vs பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், மேடவாக்கம்.. நெட்டிசன்கள் தாக்கு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூரில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பெரிய அளவில் வலுத்து வருகிறது. அதுவும் சென்னையில் விஐபிக்கள் வாழும் ராஜா அண்ணாமலைபுரத்துடன், மற்ற பகுதிகளை ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள். பசுமை வழிச் சாலை எப்படி உள்ளது என்றும் கேட்கும் அவர்கள், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், போரூர், பூந்தமல்லி ஆகியவற்றை ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள்.
சென்னை மாநகரம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ந்து விட்டது. சென்னை மாநகரம் என்பது வடக்கே மீஞ்சூர் தொடங்கி தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஆவடி தாண்டி திருவள்ளூர் வரையிலும், தென்மேற்கே திருமழிசை வரையிலும் வளர்ந்துள்ளது. சென்னை என்பது பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி என மூன்று மாநகராட்சிகளாக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சியை போல், தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் இல்லை..

குறிப்பாக தாம்பரம், ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சரியான சாலை வசதிகளோ, குடிநீர் வசதிகளோ இல்லை. அந்த பகுதி மக்கள், சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதிகளை மேம்படுத்த அமைக்க வேண்டும் என்றும், குப்பைகள் திறம்பட கையாளப்பட வேண்டும் என்றும், தெருநாய் பிரச்சனைகள், சாலைகளில் திரியும் மாடுகள் பிரச்சனை, தெருவிளக்குகள் பிரச்சனை போன்றவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், மழைநீர் சாலைகளில் தேங்கும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆனால் என்ன சிக்கல் என்றால், 2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலேயே இன்னும் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக மேம்படுத்தப்படவில்லை.. அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், மணலி, போரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இப்போதுதான் ஓரளவு நிலைமை மாறி உள்ளது. ஆனால் நங்கநல்லூர் போலவோ, ராஜா அண்ணாமலைபுரம் போலவோ மாறவில்லை.. அப்படி திட்டமிடப்பட்ட நகரங்களின் சாலைகள் போல மாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் நிலைமை இப்படி என்றால், தாம்பரம், ஆவடி மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதிகள் மற்றும் 2026ல் இணைய போகும் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.ஏனெனில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்பட சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாகவும், குப்பைகள் நிறைந்த சாலைகளாக இருப்பதாகவும், மழை வந்தால் தண்ணீரில் சாலைகள் மோசமான நிலையை அடைவதாகவும், கழிவுநீர் வடிகால் வசதி, மழைநீர் வடிகால் வசதிகள் சரியாக இல்லை என்றும் குற்றம்சாட்டி கடந்த சில நாட்களாகவே அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
கவுன்சிலர்கள், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ, தென் சென்னை சென்னை எம்பி ஆகியோரை விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். சோழிங்கநல்லூர் தொகுதி மட்டுமின்றி, பூந்தமல்லி, ஆவடி, எண்ணூர், மணலி, போரூர் உள்பட சென்னையின் புறநகர் பதிகளிலும் சாலை வசதிகள் தொடர்பான பிரச்சனையை எழுப்பி வருகிறார்கள். இதில் மிக அதிகப்படியான குரல் எந்த சாலை தொடர்பாக வருகிறது என்றால், வேளச்சேரி தாம்பரம் சாலை தொடர்பாகவே வருகிறது. மிக கடுமையான நெரிசல் உள்ள இந்த சாலை தொடர்பாகவே விமர்சனங்கள் அதிகமாக வருகிறது.
அதிலும் பள்ளிக்கரணை, மேடவாக்கம் பகுதிகளில் உள்ள குறுகிய சாலை மற்றும் பள்ளம் நிறைந்த சாலைகள் தான் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அரசும் நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஆவடி மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் அதிகமாக உள்ளதால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். சிலர் சென்னையில் விஐபிக்கள் வாழும் ராஜா அண்ணாமலைபுரத்துடன் ஒப்பிட்டு விமர்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications