ஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா?
நேற்று நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்து அளித்த பேட்டியில் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்வது போல செய்துவிட்டு, ஒரு பக்கம் ஆதரவாக பேசி இருக்கிறார்.
சென்னை: நேற்று நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்து அளித்த பேட்டியில் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்வது போல செய்துவிட்டு, ஒரு பக்கம் அரசுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
Recommended Video
டெல்லியில் மூன்று நாள் தொடங்கிய கலவரம் இன்னும் விடாமல் நடந்து வருகிறது.இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில் இதுவரை 30க்கும் அதிகமான இஸ்லாமியர்கள் பலியாகி உள்ளனர். 160க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் நடக்கும் கலவரத்தில் இஸ்லாமியர்கள்தான் அதிக குறி வைத்து தாக்கப்பட்டார்கள். முக்கியமாக இஸ்லாமியர்களின் கடைகள் அதிகம் குறி வைத்து கொளுத்தப்பட்டது. இந்த கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

என்ன ஆதரவு
பொதுவாக மத்திய பாஜக அரசுக்கும், தமிழக அதிமுக அரசுக்கும் நடிகர் ரஜினிகாந்த் எதிராக பேசியது கிடையாது. மத்திய அரசு என்ன சட்டம் கொண்டு வந்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுதான் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கம். இதனால் ரஜினியையும் மத்திய பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அதிகமாக ஆதரிப்பது உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிக்கு எதிரான வருமான வரி வழக்கு கூட தள்ளுபடி செய்யப்பட்டது. இவர்கள் இருவருக்கும் நல்ல உறவு நீடித்து வருகிறது.

ஆனால் என்ன
ஆனால் திடீரென்று நேற்று நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர். மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்விதான் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம். மத்தியில் இருப்பவர்களை இதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை.

ஆனால் அதை செய்யவில்லை
உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. அதை புரிந்து கொள்ள வேண்டும். டிரம்ப் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய அரசு ஜாக்கிரதையாக இருந்திருக்கவேண்டும். ஆனால் அதை செய்யவில்லை என்று குறிப்பிட்டார். ரஜினியின் இந்த பேச்சு பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. நேற்று முழுக்க இது செய்திகளில் பெரிய விவாத பொருளாக மாறியது.

ரஜினி நிலைப்பாடு
ஆனால் எப்போதும் போல ரஜினி இன்னொரு பக்கம் பாஜகவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளார். ஆம், அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதற்கு எதிராக போராட்டம் செய்வது தேவையில்லாதது. அதனை நான் சொன்னால், என்னை பாஜக ஆதரவாளர் என்று கூறுவார்கள். என்னை பா.ஜ.கவோடு இணைத்து பேசுவார்கள். பா.ஜ.கவின் ஊதுகுழல் என்று என்னைக் கூறுவார்கள், எனக்கு வேதனை தருகிறது. என்றார்.

பாஜக ஆதரவு
அதோடு, வன்முறைச் சம்பவங்களை மத்திய, மாநில அரசுகள் தொடக்கத்திலேயே இதனை களைய வேண்டும். போராட்டங்கள் ஏற்படாமல் முதலிலேயே தடுக்க வேண்டும். போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒடுக்க வேண்டும், என்றுள்ளார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு பாஜகவிற்கு ஆதரவாக பார்க்கப்படுகிறது.

சிஏஏ ஆதரவு
போகிற போக்கில் ரஜினி, சிஏஏவை திரும்ப பெற மாட்டார்கள், போராட்டம் எல்லாம் வீண் என்று கூறிவிட்டார் . அதேபோல் போராட்டத்தை தொடக்கத்திலேயே முடக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறிவிட்டார். கலவரத்தை முடக்க வேண்டும் என்று கூறியவர், யார் கலவரத்தை தூண்டி விட்டார்கள் என்று கூறவில்லை, கபில் மிஸ்ரா போன்ற பாஜக தலைவர்களை பற்றி பேசவில்லை.

மக்கள் போராட்டம்
எப்போதும் போல இப்போதும் ரஜினி மக்கள் போராட்டத்தை எதிர்த்துதான் பேசி உள்ளார். ஆங்காங்கேமழை சாரல் போல பாஜக எதிர்ப்பை தூவி இருக்கிறார். பாஜகவை விமர்சிப்பது போல விமர்சித்துவிட்டு, சிஏஏ போராட்டத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். ஒருவகையில் பாஜக ஆதரவாளர்களை இந்த பேட்டி குஷிப்படுத்தி இருக்கிறது. அதனால் தான் பாஜக தலைவர்களும் இதற்கு பெரிதாக எதிர்வினையாற்ற வில்லை.

ரஜினி இரட்டை நிலைப்பாடு
ரஜினி பல படங்களில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அரசியல் என்றும் வரும் போதும் கூட அவரால் நிலையாக ஒரு முடிவை எடுக்க முடிவது இல்லை. அரசியலிலும் அவர் இரண்டு நிலைப்பாடுதான் எடுத்து வருகிறார். ஒரு சமயம் ப்ளூ சிப் வைத்த சிட்டி போல பேசுகிறார், இன்னொரு சமயம் ரெட் சிப் வைத்த சிட்டி போல பேசுகிறார். இவரின் உண்மையான கொள்கைதான் என்ன? என்று அவரின் ரசிகர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை குழம்பி போய் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications