யாருக்கு ராஜ்யசபா சீட்? தேமுதிக? பாமக? யோசிக்காம சட்டுனு எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தை!
சென்னை: அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் விவகாரம் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது. அதிமுகவிடம் இருந்து ராஜ்யசபா சீட் பெற தேமுதிக காய்நகர்த்தி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர் சந்திப்பின்போது, அது தொடர்பாகப் பேசியுள்ளார்.
பாமக தரப்பில் அதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டு கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு "ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு அறிவிப்பு வந்தால் அதை பற்றி பேசுவோம். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு; கூட்டணி வேறு, தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக நீடித்து வருகிறது. அண்மை காலங்களில் தேமுதிக மற்றும் அதிமுக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பது குறித்த கேள்வி தற்போது முக்கிய விவாதமாக மாறத் தொடங்கி உள்ளது.
அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டு வருகிறது தேமுதிக. தேமுதிக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ராஜ்யசபா சீட்
தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக உறுதி அளித்து உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் குறித்த கேள்விக்கு, "யார் சொன்னது? அதிமுக ஒரு சீட் தரும் என்று சொன்னதா? தேர்தல் உடன்படிக்கையை படித்துவிட்டு வந்து பேசுங்கள்" என்று பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுக - தேமுதிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுக வாக்குகள்
ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவ அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து 18 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 6 எம்.பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்திரசேகர் ஆகியோரின் பதவிகாலம் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், 134 எம்.எல்.ஏக்களை கொண்ட திமுகவுக்கு 4 இடங்களும், 62 எம்.எல்.ஏக்களை வைத்து உள்ள 1 இடமும் கிடைக்கும். அதிமுகவுக்கு மற்றொரு சீட் கிடைக்க வேண்டுமென்றால் பாமக, பாஜக அல்லது ஓ.பன்னீர்செல்வத்தின் தயவு தேவை. இந்நிலையில் தான் ஒரு ராஜ்யசபா சீட்டை தேமுதிக கேட்டு வருகிறது. பாமகவும் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கேட்டு காய்நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பேட்டி
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, பாமக தரப்பில் அதிமுகவிடம் ராஜ்யசபா சீட்டு கேட்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளதே என்ற கேள்விக்கு "இன்னும் ராஜ்யசபா தேர்தலே அறிவிக்கப்படவில்லை. நீங்களாக ஒரு கற்பனையை உருவாக்கி கொண்டு பேசுகிறீர்கள். ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு அறிவிப்பு வந்தால் அதை பற்றி பேசுவோம். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு; கூட்டணி வேறு, தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மீது விமர்சனம்
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கைக் குழு.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு இப்படி பல பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் திசைதிருப்புவதற்காக தான் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி நாடகம் அரங்கேற்றியிருக்கிறார்." எனத் தெரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications