1 மாத வேலைக்கு.. 9 மாதம் காலக்கெடுவா? 10.50% உள் இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கூடுதல் காலக்கெடு அடுத்த சில நாட்களில் முடிவடைடவுள்ள நிலையில், பரிந்துரை அறிக்கையை விரைவாக பெற்று சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 69 சதவிகித இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் மேலெழுந்தன. குறிப்பாக, இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம" அவசர சட்டத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் போதிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூறுகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த கடிதத்தில், "தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு தாமதமாகி வரும் நிலையில், சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, வன்னியர் 10.50 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.
வன்னியர்களின் தொடர் போராட்டம், 21 உயிர்கள் தியாகம் ஆகியவற்றுக்குப் பிறகு வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமூகங்களைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இடஒதுக்கீட்டுப் பிரிவு தங்களின் தந்தை கலைஞர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு, அதற்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதும், அதனால் வன்னியர்களுக்கு பயன் கிடைக்காத நிலையில், பா.ம.க. மீண்டும் ஒரு போராட்டம் நடத்தி, கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டதும் வரலாறு ஆகும். அந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான ஆணையை தாங்கள் தான் பிறப்பித்தீர்கள். அந்த இட ஒதுக்கீட்டு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து நானும், தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், போதிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என 31.03.2022-இல் தீர்ப்பளித்தது.
அதனடிப்படையில் வன்னியர்களுக்கு 10.50 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை வழங்க சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கடந்த 02.04.2022-ஆம் நாள் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு வேண்டுகோள் விடுத்தோம். அதைத் தொடர்ந்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர் 08.04.2022&ஆம் நாள் தங்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அது குறித்த எனது கடிதத்தையும் தங்களிடம் வழங்கினர். அதன்பிறகும் எதுவும் நடைபெறாத நிலையில், வன்னியர் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி 04.07.2022, 10.09.2022 ஆகிய நாட்களில் தங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதினேன்.

அதன் தொடர்ச்சியாகவே, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, 7 மாதங்களுக்குப் பிறகு, கடந்த நவம்பர்17-ஆம் நாள் உள் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட ஆய்வு வரம்புகளுடன் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வுபெற்ற நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் இரு மாதங்கள் கழித்து கடந்த ஜனவரி 12-ஆம் நாள், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்ற கூடுதல் ஆய்வு வரம்பை நிர்ணயித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டது.
அதன்படி ஆணையம் கடந்த ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்திருக்க வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்திருந்தால் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால், ஆணையம் எந்த பணிகளையும் தொடங்காத நிலையில், அதற்கு அக்டோபர் 11-ஆம் நாள் வரை கூடுதலாக 6 மாதங்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டது. அந்தக் கெடுவும் அடுத்த சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசுக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிக்கை தருவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. அதுமட்டுமின்றி வரும் 9&ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டம் 15-ஆம் நாளுக்குள் நிறைவடைந்து விடும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வன்னியர் இடஓதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், 2024-25ஆம் கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பே இல்லை.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் தமிழக அரசின் சார்பில் செய்யப்படும் கால தாமதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தேவையான புள்ளிவிவரங்களை அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் திரட்டி விட முடியும். ஆனால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 9 மாதங்கள் காலக்கெடு வழங்கியும் இன்று வரை பரிந்துரை அளிக்கப்படவில்லை. பிகார் மாநிலத்தில் 45 நாட்களில் 13 கோடி பேரின் சாதி, கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை நிலை உள்ளிட்ட 19 வகையான விவரங்கள் வீடுவீடாக சென்று திரட்டப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அதில் 10% உழைப்பு கூட தேவைப்படாத வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான விவரங்களைத் திரட்ட தமிழக அரசாலும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தாலும் முடியவில்லை என்றால், அதற்கான காரணம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை என்ற முடிவுக்குத் தான் வர வேண்டியிருக்கிறது.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, 08.04.2022, 04.07.2022, 10.09.2022, 17.02.2023, 30.04.2023, 10.05.2023 ஆகிய நாள்களில் 6 முறை தங்களுக்கு கடிதங்களை எழுதியிருக்கிறேன். குறைந்தது 10 முறையாவது தங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தொடர்வண்டித்துறையின் முன்னாள் இணை அமைச்சர் அரங்க. வேலு, வழக்கறிஞர் க.பாலு உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை தங்களின் செயலாளர்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளையும் சந்தித்து பேசியிருப்பார்கள். ஆனால், அதனடிப்படையில் வன்னியர்கள் உள் இட ஒதுக்கீட்டுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனும் போது, வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இழைத்த நீராக வீணாகி விட்டதோ என்ற வேதனையும், ஏமாற்றமும் தான் எங்களுக்கு விஞ்சுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் வன்னியர்களுக்கான உரிமைகளை கடுமையான போராட்டத்தின் மூலமாகவே வென்றெடுத்திருக்கின்றன. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு 02.04.2022ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நான், ''வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டிற்காக நாம் எந்த வகையான போராட்டமும் நடத்தத் தேவையில்லை. போராட்டம் நடத்தாமலேயே வன்னியர் இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்குவார்'' என்று கூறியிருந்தேன். அதற்குக் காரணம் தங்களின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை தான். ஆனால், இப்போது எங்களின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர் இட ஒதுக்கீடு வழங்குவதில் தேவையில்லாமல் செய்யப்படும் கால தாமதம் வன்னிய மக்களிடமும், இளைஞர்களிடமும் பெரும் ஏமாற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். தைலாபுரம் தோட்டத்தில் 06.10.2023ஆம் நாள் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்திலும் இதே கருத்து தான் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது. தேவை ஏற்பட்டால் எத்தகைய போராட்டங்களையும் நடத்த பா.ம.க.வும் தயாராகவே இருக்கிறது.
ஆனாலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்கள், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு வரும் 11-ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையை பெற வேண்டும். அதனடிப்படையில், வரும் 9-ஆம் தேதி தொடங்கவுள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற முதலமைச்சராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications