அன்புமணியை பார்த்த அம்மா.. படக்கென கையை பிடித்த ஜிகே மணி! சமாதானமா? ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்
சென்னை: பாமகவில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை, கௌரவ தலைவர் ஜிகே மணி சந்தித்து பேசினார். தொடர்ந்து அன்புமணி வீட்டுக்கு ராமதாஸின் மனைவியும் அன்புமணியின் தாயுமான சரஸ்வதி வந்தார். இந்த நிலையில் இந்த சந்திப்புகள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் பாமக நிறுவனரான ராமதாஸ்.
பாமகவில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சூழலில் அன்புமணி தரப்பில் மூன்று எம்எல்ஏக்களும், ராமதாஸ் தரப்பில் இரண்டு எம்எல்ஏக்களும் இருக்கின்றனர்.
ஜிகே மணி, அருள் உள்ளிட்டோர் ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக இருக்கின்றனர். திலகபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அன்புமணியின் பின்னால் இருக்கின்றனர். இப்படி பாமக இரண்டாக உடைபட்டு இருக்கும் நிலையில் அன்புமணியையும் ராமதாஸையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

கட்சிக்குள் இருந்து மட்டுமல்லாது, திமுக, அதிமுக கட்சிகளில் இருக்கும் சில நிர்வாகிகளும் தந்தை மகனை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அன்புமணியின் வீட்டுக்கு சென்றார் அவரது தாயான சரஸ்வதி. அன்புமணியும் அவரது மனைவி சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் சரஸ்வதிதம் ஆசி பெற்றனர். தொடர்ந்து இருவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசினார்.
இதற்கிடையே நேற்று ஒரு திருமண நிகழ்ச்சியில் அன்புமணி கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் பாமக கௌரவ தலைவரான ஜி.கே.மணியும் பங்கேற்றார். ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருக்கும் ஜிகே மணி, அன்புமணியின் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வந்தார். இந்த நிலையில் அன்புமணி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வந்த ஜி கே மணி அவரது கையை பிடித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால், ராமதாஸ் தரப்பில் இருந்து சமாதான பேச்சுக்காக இந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இரு சந்திப்பு குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார் ராமதாஸ். சென்னையில் பாமக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி இல்ல திருமண விழா நடைபெற்றது. அங்கு சென்றபின் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னையில் இருந்து கார் மூலம் இன்று காலை தைலாபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்," நான் தற்பொழுது சந்தோஷமாக இருக்கிறேன். அன்புமணி ராமதாஸை தாய் சரஸ்வதி அம்மாள் சந்தித்தது பேசியிருக்கிறார். தாய் தனது மகனையும், மகன் தாயை சந்திப்பதும் இயல்பு தான். பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி, நேற்று நடைபெற்ற திருமண விழாவில் அன்புமணி ராமதாசை சந்தித்து கைக்கூலிக்கு பேசியதாக தகவல் கிடைத்தது. இந்த சந்திப்பு குறித்து ஜிகே மணி இடம் கேட்டு நாளை பதில் கூறுகிறேன். தொடர்ந்து பாமகவில் மோதல் போக்கு அதிகமாக உள்ளதாக கேட்கிறார்கள். கட்சியை பொருத்தவரை மோதல் போக்கு நான்கு நாள் இருக்கும். அதுக்கப்புறம் சரியாகி விடும் என்று பார்த்திருங்கள்.. காத்திருப்போம்.. காத்திருப்போம்.. காலங்கள் வரும்.." என பாடல் பாடி நகைச்சுவையாக பதில் கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications