சண்டைக்காரர் ரஞ்சித்.. சிங்கிளா எதிர்த்து நிற்பார்; தம்பி உடைத்த உண்மைகள்! கண்கலங்கிய அம்மா
சென்னை: இயக்குநர் ரஞ்சித்தின் அம்மா இதுவரை வெளியுலகத்திற்கு தெரியாத பல விசயங்களைப் பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். கூடவே தனது மகன் எடுக்கும் திரைப்படத்தை முதன்முதலாக நேரில் பார்த்த அனுபவம் குறித்துப் பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமா ஒரு காலத்தில் மதுரை படைப்பாளிகளின் மையமாக இருந்தது. அதை உடைத்து வடத் தமிழ்நாட்டின் மக்களை தமிழ் சினிமாவில் மிக அழகாகக் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் பா ரஞ்சித். மிக எளிய பின்புலத்திலிருந்து சினிமாவுக்குள் வந்தவர். என்னதான் அவர் 'மெட்ராஸ்' எங்கள் ஊர் என்று சொன்னாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கம் தான். ஆனால், சென்னையில் மையத்தில் அமைந்துள்ள ஓவியக் கல்லூரியில் தான் படித்தார்.

பலருக்கும் ரஞ்சித் ஒரு ஓவியர் என்பது தெரியாது. அவர் முதன்முதலாக அவரது ஊர் முகப்பில் உள்ள சுவரில் அம்பேத்கர் படம் ஒன்றை வரைந்ததன் மூலம் தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார் என்கிறார் அவரது தம்பி சரவணன். இரவிலும் ஒரு வாகனம் ஊருக்குள் புகும்போது அதன் வெளிச்சம் முதலில் படுவது அந்த அம்பேத்கர் சுவரின் மீதுதான். அதற்காகவே அதை அங்கே வரைந்துள்ளார். இன்று பக்கா சென்னைக்காரராக மாறிய பிறகு வாக்களிப்பதற்காகத் தனது கிராமத்திற்குத்தான் செல்கிறார். அங்கேதான் அவரது அண்ணன், தம்பி, அம்மா என்று உறவுக்காரர்கள் ரத்த பந்தங்கள் எல்லாம் உள்ளனர். இப்போது வெளியாகி உள்ள அவரது தங்கலான் படத்தில் அவரது தம்பி மகளை நடிக்க வைத்துள்ளார்.
ரஞ்சித் தனது திரைப்படங்களில் அவரது அப்பா, அம்மாவின் சாயலில் நிஜ கதாபாத்திரங்களாக படைத்துள்ளார். அதைப் பற்றி அவரது தாய் ஒரு சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசி இருக்கிறார். ரஞ்சித் பற்றி அவரது அம்மா பேசுகையில், "இதுவரை ரஞ்சித் படத்தின் ஷூட்டிங் எதற்குமே நான் போனதே இல்லை. முதன்முதலாக தங்கலான் படத்திற்காகத்தான் 40 நாட்கள் பெங்களூரு போனேன். அப்போதுதான் என் மகன் சினிமாவில் படும் கஷ்டத்தைப் பார்த்தேன். கல்லிலும் மண்ணிலும் அவர் புரண்டு கொண்டு வேலை செய்தான். லேசா தவறி விழுந்தால் கூட கை, கால் உடைகிறது. அதைப் பார்த்தபோது எனக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. நான் ஏதோ சினிமாவில் பணம் சம்பாதிக்கிறான் என மேலோட்டமாக நினைத்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் அவன் படும் கஷ்டத்தை நேரில் பார்த்தேன்.

அதனால் தினம் அழுவேன். உடனே என்னைக் கூப்பிட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டான். இனிமேல் ஷூட்டிங் பார்க்க வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டான். அதன் பின்னால் சினிமா என்பது எவ்வளவு கஷ்டமான வேலை என தெரிந்துகொண்டேன். நான் அழுவதைப் பார்த்துவிட்டு நடிகர் விக்ரம், 'ஏம்மா அழுற? அழாதம்மா’ என்பார். என்னை அவர் அம்மா என்றுதான் கூப்பிடுவார்.
அட்டகத்தி படத்தில் ஒரு அம்மா கேரக்டர் வரும். அது என்னை மனதில் வைத்துத்தான் எடுத்தேன் என ரஞ்சித் சொல்லி இருக்கிறான். அதேபோல ஒரு அப்பா கேரக்டர் தண்ணீர் போட்டுக்கொண்டு வாழை மரத்தை வெட்டுவார் இல்லையா ? அது அவர் அப்பா கேரக்டர்தான். அவர் அப்படித்தான் குடித்துவிட்டு இரவில் இளவம் பஞ்சி மரத்தை வெட்டி ரகளைப் பண்ணிக் கொண்டிருப்பார். என் குழந்தைகளை ஒருநாள் கூட அவர் அடித்தது இல்லை. நான் தான் அடிப்பேன். குடிகாரன் பிள்ளைகள் ஒழுங்காக வளரவில்லை என ஊர் சனம் சொல்லிவிடக் கூடாது எனக் கண்டித்து வளர்த்தேன். அவர் குடித்தாலும் ஒரு ரூபாய் கூட கடன் வைக்காமல் எங்களைக் காப்பாற்றி வந்தார். அவர் குடித்துக் குடித்து லிவர் பழுதாகிவிட்டது. அவர் உயிரைக் காப்பாற்ற 60 லட்சம் வரை செலவு செய்தான் ரஞ்சித். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்கிறார்.
ரஞ்சித்துடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். ஒரு அண்ணன். இவர் பெயர் பிரபு. வழக்கறிஞராக இருக்கிறார். ஒரு தம்பி. அவர் பெயர் சரவணன். ரஞ்சித்தின் அப்பா பக்க திமுக தொண்டர். அவர் இறந்தபோது திமுக கொடியைப் போர்த்தித்தான் அடக்கம் செய்துள்ளனர். அவரது தம்பி சரவணன், “ஐந்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் ஒன்றாகப் படித்தோம். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி எங்கள் அண்ணன் பிரபுதான். அவர் மூலமாகத்தான் பூவை மூர்த்தி அரசியல் தொடர்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ரஞ்சித். அவர் ஒரு அரசியலை முன்வைத்துப் போராடுகிறார். சின்ன வயதில் ரஞ்சித் விளையாட்டில் கூட தனித்துத் தெரிவார். இளம் வயதிலேயே தைரியமானவர். நிறையச் சண்டை செய்வார். அவர் சிங்கிளாகவே பலரை எதிர்த்து நின்று அடிப்பார். யாரைப் பார்த்தும் அவர் பயந்தது இல்லை. அவர் உடன் பிறந்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். அவர் உடன் சேர்ந்து நிற்கவே விரும்புகிறேன்” என்கிறார்.












Click it and Unblock the Notifications