ரேஷன்தாரர்களுக்கு தக்காளி விற்பனை.. ரேஷன் கடைகளில் முண்டியத்த கூட்டம்..மளிகை பொருளும் விற்பனையாகுமா?
சென்னை: சென்னையில் இன்று முதல் ரேஷன் கடைகளிலேயே தக்காளி கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.. முதல்கட்டமாக சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை ரூ 60 அதிகரித்து, பிறகு, ரூ 100 முதல் ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியை யாரும் பதுக்கி வைக்கக் கூடாது என உத்தரவும் போடப்பட்டுள்ளது. எனினும், தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்தவாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது..

கூட்டுறவு துறை: ஆனால், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது.. வெளிசந்தைகளிலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.68-க்கு விற்பனையானது. பிறகு, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60 ஆனது.
தாறுமாறு விலை: தக்காளி விலை உடனடியாக இறங்குமுகத்தில் சென்றதால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.. எனினும், தக்காளி விலை உச்சத்துக்கு சென்றுவிட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளனர்..
இந்நிலையில்தான், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படியே, நேற்று முதல் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது.
ஒரே நாளில்: அதேபோல, சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை எனப் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.. ஒரு கிலோ தக்காளி மட்டுமே ஒருவருக்கு வழங்கப்படுகிறது.. மேலும், ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர்.
ரேஷன் கார்டுகள்: தக்காளியை வாங்க வருபவர்கள் ரேஷன் கார்டு கொண்டு வரத்தேவையில்லை என்றும் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் யார் வேண்டுமானாலும் தக்காளியை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காய்கறிகள் விலையும் அதிகரித்து வருவதால் தக்காளியை போல காய்கறிகளையும் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் அரசு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி உள்ளது.
முன்னதாக, சென்னையில் ஒவ்வொரு கடைக்கும் தலா, 50 கிலோ தக்காளி விற்பனைக்கு அனுப்பப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு தக்காளி விற்பனை துவங்கியது.. அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்து கடைகளிலும் முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டது.. கடைகளில் மக்கள் கூட்டமும் அலைமோதியது. சென்னையில் ரேஷன் கடை தவிர்த்து, ஏற்கனவே உள்ள பண்ணை பசுமை கடைகள் உட்பட, 111 கூட்டுறவு கடைகளிலும் நேற்று ஒரே நாளில் 5,500 கிலோ தக்காளி விற்பனையாகி உள்ளது.
கோரிக்கை: இதுகுறித்து, ரேஷன் அட்டைதாரர்கள் சொல்லும்போது, அனைத்து ரேஷன் கடைகளிலும் தக்காளியை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் குறைந்த விலைக்கு தக்காளி கிடைக்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications