சென்னை குன்றத்தூருக்கு பொக்லைனுடன் போன அதிகாரிகள்.. ரூ.23 கோடி அரசு நிலம் அதிரடியாக மீட்பு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.87 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து தொழிற்சாலை உள்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வந்ததை கண்டுபிடித்த அரசு அதிகாரிகள், நேற்று அதிரடியாக சென்று மீட்டனர். இந்த நிலத்தின் மதிப்பு 23 கோடி என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு கோடிகளில் போய் கொண்டிருக்கிறது. இதனால் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருப்பவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. சென்னையில் நீர்வழிப்பாதை, வாய்க்கால், அனாதீனம் போன்ற நிலங்கள் ஏராளமான உள்ளன. இப்படி பல்வேறு அரசு நிலங்களை சிலர் ஆக்கிரிமித்து, வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.87 ஏக்கர் அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அங்கு தண்ணீர் கம்பெனி, கட்டுமான பொருட்கள் விற்பனை கடை, கல் அறுக்கும் தொழிற்சாலை வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள். இது குறித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாசில்தார் மாலினி, வருவாய் அலுவலர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டு இருந்த மதில் சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் முற்றிலுமாக இடித்து அகற்றினார்கள்.
அதேநேரம் தற்போது அந்த பகுதியில் கல் அறுக்கும் தொழிற்சாலை மற்றும் தண்ணீர் கம்பெனி இருப்பதால் அதனை அப்புறப்படுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதற்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.
குன்றத்தூரில் மீட்கப்பட்ட 2.87 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.23 கோடி என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே உரிய அறிவிப்பு எதுவும் இல்லாமல் வருவாய் துறை அதிகாரிகள் வந்து சுற்றுச்சுவரை இடித்து தள்ளி உள்ளதாக அரசு நிலத்தை பயன்படுத்தி வந்தவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகள் அதற்கு விளக்கம் அளித்தனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications