தேசிய கல்விக் கொள்கை 2020-யின் பிராந்திய மொழிபெயர்ப்பு வெளியானது.. தமிழ்மொழி புறக்கணிப்பு
சென்னை: தேசிய கல்விக் கொள்கையின் ஆவணங்கள் 17 மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியான நிலையில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 484 பக்கங்கள் கொண்ட வரைவை மத்திய அரசுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. இந்த புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ர மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

எனினும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை மொழிபெயர்க்கப்பட்டது.
ஆனால் மற்ற மொழிகளிலும் புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கையை மொழிபெயர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மொழி பேசும் மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, காஷ்மீரி, கொங்கணி, மணிப்புரி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிமாற்றம் செய்து உள்ளூர் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதில் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications