மு.க.ஸ்டாலின் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
சென்னை: மத்திய அரசின் நல்லாட்சி விருதை தமிழக அரசு பெற்றதால் பொறாமைத் தீயில் திமுக வெந்துகொண்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மேலும், உண்மைக்கு புறம்பாக பிரச்சாரம் செய்து முதல்வரை வீழ்த்த முயன்றால் அது ஸ்டாலினுக்கு தோல்வியையே தரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கனவு
ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வர் பதவியில் அமர்ந்து குடும்ப ஆட்சியை நிலைநாட்டிக் கொள்ளலாம் என ஸ்டாலின் கனவு கோட்டை கட்டியதாகவும், ஆனால் அவரது எண்ணத்தை நிறைவேற்ற முடியாதவாறு அதிமுக இரும்புக்கோட்டை கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுபிள்ளை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பணிவு, எளிமை, அரசியல் வெற்றிகள் குறித்து சிறுபிள்ளைத்தனமாகவும், பொறுப்பற்ற முறையிலும் வெறுப்பை உமிழ்ந்து ஸ்டாலின் அறிக்கை வெளியிடுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மேலும், இதுவரை ஸ்டாலின் தனது அறிக்கையில் அறிவுப்பூர்வமான கருத்துக்களை கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

குழப்பம்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுரிமைச் சட்டம் தொடர்பாக மத்திய அரசு தெளிவாக விளக்கம் அளித்துள்ள நிலையில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு தமிழக அரசுக்கு எதிராக ஸ்டாலின் மக்களை குழப்பி வருவதாக சாடியுள்ளார்.

குறுகிய சிந்தனை
இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் எண்ணற்ற துயரங்களை ஏற்படுத்திய திமுக, அவர்களின் நலன் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். மேலும், சிறுபான்மை மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத ஸ்டாலின் அவர்களின் ஓட்டுகளை பெற வேண்டும் என்ற குறுகிய சிந்தனையில் செயல்படுவதாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications