10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் இணையத்தில் லீக்கானதாக தகவல்! மாணவர்கள் புகார்
சென்னை: ஒரு சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே இணையத்தில் வெளியாவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரும்பாலும் பள்ளிகள் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வந்தது.

இடையில் டெல்டா கொரோனாவுக்கு பின்னர் வைரஸ் பாதிப்பு குறைந்த போது, பள்ளிகள் சில காலம் திறக்கப்பட்டன. அப்போது மீண்டும் ஓமிக்ரான் பரவல் ஏற்பட்டதால், மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
இப்போது தான் ஓமிக்ரான் கொரோனாவால் ஏற்பட்ட 3ஆம் அலை முடிவுக்கு வந்துள்ள நிலையில், பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நர்சரி பள்ளிகளைத் திறக்கவும் மாநில அரசு அனுமதி அளிதுள்ளது.
பல மாதங்களாக ஆன்லைன் வழியாகவே பாடங்களை கற்று வந்த மாணவர்கள், இப்போது தான் பழையபடி பள்ளிகளுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். ஆன்லைன் கல்வியில் பாகுபாடு உள்ளதால் இந்தாண்டு மாநிலத்தில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்து.
அதன்படி தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒரு சில பள்ளிகள் மூலம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் முன் கூட்டியே வெளியாவதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலையில் திங்கள்கிழமை (பிப். 14) 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் தேர்வும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித தேர்வும் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் தேர்வு வினாத்தாள்கள் இப்போதே டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் பரவி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதை இணையத்தில் பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
