நாம் தமிழர் கட்சியில் கலகம்- சீமானின் பெரியார் எதிர்ப்பு பேச்சுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கண்டனம்!
சென்னை: தந்தை பெரியார் மற்றும் திராவிடக் கோட்பாட்டை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருவதற்கு அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெகதீச பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், பெரியாரையும் திராவிடத்தையும் ஒழிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு கை கோர்த்து தமிழ்த் தேசியம் வெல்ல காலத்துக்கு ஏற்றார் போல வேலைத் திட்டத்தைத் தயார் செய்ய வேண்டும் என சீமானுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது இந்துத்துவா வளர்ச்சிக்கு உதவுமே ஒழிய தமிழ்த் தேசிய வளர்ச்சிக்கு உதவாது.

ஆரிய, வைதிக, பிராமண, இந்துத்துவாவை, இந்தியை, இந்திய தேசியத்தை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியர்களின் முதல் கடமை. பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இதுதான் நோக்கம்; நமது உயிர் மூச்சான தமிழீழத்தையும் பிரபாகரனையும் தமிழை ஆட்சி மொழியாக, வழிபாட்டு மொழியாக, வழக்காடு மொழியாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் இந்துத்துவாவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்களா? அனைத்து சாதியும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பெரியாரியவாதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்; இந்துத்துவாவாதிகள் எதிர்க்கிறார்கள்.
தேசியக் கல்விக் கொள்கையை பெரியாரை ஏற்றுக் கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்; இந்துத்துவாவாதிகள் திணிக்கிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை போன்ற திட்டங்களை ஆர்.எஸ்.எஸ், பாஜக திணிக்கிறது; பெரியாரியவாதிகள் எதிர்க்கிறார்கள்.
திராவிடக் கருத்தியல் சென்ற நூற்றாண்டில் தோன்றிய கருத்தியல். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழையும் தமிழர்களையும் அழித்து வந்தது ஆரியம்தான். நாம் தமிழர் கட்சியை துவக்கியதும் அன்றைக்கு அரவணைத்தவர்களும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரியர்கள்தான்.
திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்தக் கருத்துதான்; நாம் தமிழர் கட்சியின் ஒட்டுமொத்த கருத்து அல்ல. ஆரியம்தான் தமிழனின் முதல் பகை; சீமானின் கருத்து ஆர்.எஸ்.எஸ், பாஜக சங்க பரிவார அமைப்புகளுக்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ்த் தேசியம் வெல்ல உதவாது.

"தமிழ்த் தேசியமானது தமிழ் பேசும் சமூகத்தின் அக முரன்பாடுகளைத் தீர்த்து அதை சரியான அரசியல் பாதையில் அணி திரட்டக் கூடிய ஒரு கருத்தியலாக, வளர்த்தெடுக்கப்படாமல் அதன் போக்கிலேயே விடப்படுமானால் சந்தர்ப்பவாதிகளின் நுனி நாவால் புரட்டப்படும் ஒரு வெற்றுச் சொற்றொடராகவே அது இருக்குமாயின் எதிர்காலத்தில் மீண்டும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படப் போகும் இன அழிப்புப் போர் அச்சுறுத்தல் கூட எமது சமூகத்தை ஒன்றுதிரட்டுவதற்கு போதாதாகிவிடும்" (தராக்கி சிவராம்- பிரபாகரனால் மாமனிதர் என பட்டம் பெற்றவர்)
திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிக்கும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு பகைவர்களின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் நட்பு முரணோடு கைகோர்த்து தமிழ்த் தேசியம் வெல்ல காலத்துக்கு ஏற்றார்போல வேலைத் திட்டத்தைத் தயார் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications