தாம்பரம் இல்லாமல் தனி வழி.. பெரும்பாடுபட்ட பெருங்களத்தூருக்கு பெரிய நிம்மதி.. மேம்பாலத்தை பாருங்க
சென்னை: தாம்பரம் சந்திப்பில் நெரிசலைக் குறைப்பதற்காக பெருங்களத்தூரில் மேம்பாலம் கட்டப்பட்டது.இதில் மிக முக்கியமான பெருங்களத்தூர் ரோட்டரி மேம்பாலத்தின் ஐந்தாவது மற்றும் இறுதிப் பகுதி அடுத்த ஆண்டு நிறைவடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மேம்பாலம் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலையுடன் இணையும் என்பதால், வேளச்சேரி, மேடவாக்கம் மற்றும் தாம்பரம் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் அப்படியே போய்விடலாம். தாம்பரத்திற்குள் வராமல் போக முடியாது என்கிற நிலை மாறப்போகிறது..
பெருங்களத்தூரை தாண்டுவது என்பது ஒரு காலத்தில் சென்னைவாசிகளுக்கு தவம்.. ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை.. கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வந்த பின்னர் நிலைமை அடியோடு மாறிவிட்டது. அதேபோல் பெருங்களத்தூரில் சாலையின் இருபுறமும் மேம்பாலம் அமைக்கப்பட்டதால் எளிதாக கடந்து செல்கிறார்கள் மக்கள்.. ஆனால் மேம்பாலத்தில் கிழக்கு தாம்பரத்தையும், கிழக்கு பெருங்களத்தூரையும் இணைக்கும் பகுதியான ரோட்டரி மேம்பாலம் இன்னமும் முடியவில்லை..

வனத்துறை அனுமதி
வனத்துறை அனுமதி மற்றும் மின் துணை மின்நிலையத்தை மாற்றுதல் காரணமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக முடங்கிப் போய் கிடந்தது. சமீபத்தில் நடந்த முக்கியமான ஒருங்கிணைப்பு கூட்டங்களில் வனத்துறை அனுமதி மற்றும் துணை மின் நிலையத்தை மாற்றுவது என இரண்டு தடைகளும் நீக்கப்பட்டன, இதன் மூலம் மேம்பாலத்தின் இறுதி கட்ட பணிக்காக இறுதி 27.6 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. எனினும் வனத்துறை அறிவிக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் 500 மரங்களை வெட்டத் தொடங்கவில்லை. அங்கு தான் சாய்வு பாதை அமைக்க வேண்டியுள்ளது.
மரம் வெட்டும் பணி
மரம் வெட்டும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெற போகிறது. இதற்காக நெடுஞ்சாலைத் துறை ஏற்கனவே 55 கோடி ரூபாய் செலுத்தி, திண்டுக்கல்லில் இருந்து இரட்டிப்பு நிலத்தை இழப்பீடாக ஒதுக்கியதாகக் கூறினாலும், வனத்துறை அதிகாரிகள் முதற்கட்டமாக 280 மரங்களை மட்டுமே வெட்ட ஒப்புதல் கொடுத்துள்ளார்களாம். இரண்டாவது கட்ட அனுமதி நில நிர்வாக ஆணையரின் (CLA) முன் நிலுவையில் உள்ளது, மேலும் இரண்டு கட்டங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன் செயல்படுத்தப்படும்.
ரோட்டரி பாலம்
பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த திட்டம் முதன்முதலில் 2004-05 இல் அறிவிக்கப்பட்டாலும், அது பல தாமதங்கள், மறுவடிவமைப்புகளைச் சந்தித்தது. இறுதியாக 2018ம் ஆண்டு ஒப்புதலுக்கு வந்தது. ஆனால் மேம்பாலப்பணிகள் சரியாக முடிக்கப்படவில்லை.. ரோட்டரி பகுதி அப்படியே இன்று வரை இருக்கிறது. அதேநேரம் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் மேம்பாலம் திறக்கப்பட்டு விட்டது
எப்போது முடியும்
தற்போது ஐந்தாவது பிரிவில் உள்ள இந்த மேம்பாலத்தில் அனைத்து டெக் ஸ்லாப் பணிகளும் முடிந்துவிட்டன என்று நெடுஞ்சாலை பொறியாளர்கள் தெரிவித்தனர். அடுத்த 12 மாதங்களுக்குள் மீதமுள்ள பணிகளைச் செயல்படுத்த இந்த வாரம் ஒரு டெண்டர் விடப்பட்டது. இதனுடன், ஜிஎஸ்டி சாலையில் ரோட்டரிக்கு அடியில் எட்டு பாதைகளாக சாலையை விரிவுபடுத்தும் பணியும் நடைபெற போகிறது. தாம்பரம் சாலையை சம நிலைக்கு உயர்த்துவது மற்றும் ஸ்ரீனிவாச ராகவன் நகரில் சிறிய பேட்ஜ் ஒர்க் வேலைகளும் நடக்க போகின்றன. வரும் 2026ம் ஆண்டில் பெருங்களத்தூரின் அனைத்து நெரிசலுக்கு தீர்வு வரப்போகிறது.
உயர்மட்டப்பாலம்
இதனிடையே நேற்று முன்தினம் சட்டசபையில் பெருங்களத்தூருக்கு அமைச்சர் எவ வேலு முக்கியஅறிவிப்பு வெளியிட்டார்.இதன்படி, பெருங்களத்தூர் முதல் மாடம்பாக்கம் சந்திப்பில் இணைக்கும் வகையில், தாம்பரம் கிழக்குப் புறவழிச்சாலையின் தொடர்ச்சியாக ராஜகீழ்ப்பாக்கம் ஏரியின் குறுக்கே உயர்மட்டப்பாலம் அமைக்கப்படும். ராஜ கீழ்ப்பாக்கத்தில் இருந்து அகரம்தென் வழியாக பெருங்களத்தூர் மார்க்கத்தில் 1.4 கி.மீ. நீளத்திற்கு தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications