6 ஆயிரம் வெள்ள நிவாரணம்.. டவுட் இருக்கா? கட்டுப்பாட்டு அறை அமைத்த தமிழக அரசு.. எண்கள் இதுதான்
சென்னை: வெள்ள நிவாரண தொகை ரூ.6000 பெறுவதற்காக மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை காலை எந்த நேரத்தில் நிவாரண தொகை வழங்கப்படும் என்பது குறித்தும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, புறநகர் பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலில் முதல்வர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அரிசி அட்டைதாரர்களுக்குத்தான் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பாதிப்பு இருப்பதை விசாரித்து அதன்பின்னர் அவர்கள் வங்கி கணக்கில் ரூ.6000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் ரூ.6000 கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகங்களை தீர்க்க: நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் மு. க ஸ்டாலின் ரூ.6000 நிவாரண தொகையை வழங்குகிறார். எனினும் பலருக்கு டோக்கன் வழங்கப்படவில்லை என்றும் டோக்கன் பெற்றவர்களுக்கு எப்போது நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் பல சந்தேகங்கள் எழுந்துன. இந்த நிலையில், பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் நாளை காலை எந்த நேரத்தில் நிவாரண தொகை வழங்கப்படும் என்பது குறித்தும், நிவாரண தொகை பெறுவதற்காக மக்களுக்கு வந்துள்ள சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறையும், மக்கள் தொடர்பு கொண்டு கேட்க இலவச எண்களையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
டோக்கன் இல்லாதவர்களுக்கும்: சென்னை மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாதவர்களும், நிவாரண தொகை டோக்கன் கிடைக்கப் பெறாதவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ரேஷன் கடைகளில் உரிய படிவத்தை பெற்று நிவாரணத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். சென்னை வேளச்சேரியில் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத் தொகையை வழங்குகிறார்.
எத்தனை மணி வரை: வேளச்சேரி அஷ்டலக்ஷ்மி நகர் ரேஷன் கடையில் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மற்ற ரேஷன் கடைகளில் நாளை காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பின்னர் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கப்படும்.
கட்டுப்பாட்டு அறை: இதேபோல் ரூ.6000 நிவாரணம் பெறுவது குறித்த மக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். மேலும் நிவாரண தொகை பெறுவது தொடர்பான சந்தேகங்களுக்கு 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044 - 2859 2828 என்ற தொலைபேசி எண்ணிலும் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications