விஜய்யை நேருக்கு நேர் கேள்வி கேட்டதும்.. எவ வேலு வீட்டுக்கு ரெய்டு வந்துட்டாங்க.. சின்ன பசங்க! ஆர்எஸ் பாரதி
சென்னை: சட்டசபையில் எ.வ வேலு அவர்கள் முதல்வர் விஜய்யிடம் நேருக்கு நேராக கேள்வி எழுப்பிய மறுநாளே இப்போது ரெய்டுக்கு வந்துவிட்டார்கள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார். மேலும், "இது எல்லாம் நாங்க பாத்து பாத்து அலுத்துப் போன விஷயம்.. 1977-ல் கருணாநிதியின் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, நான் கூடவே இருந்து பார்த்தவன். இன்னைக்கு இருக்கின்ற சின்னப் பசங்களுக்கு எல்லாம் இது தெரியாது" என கூறினார்.
திமுக முன்னாள் அமைச்சர் எ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ வேலுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடந்து வருகின்றது.

நேருக்கு நேர் சட்டசபையில் கேள்வி எழுப்பினார்
எ.வ வேலு வீட்டில் நடக்கும் இந்த சோதனை குறித்து திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதியும் விஜய்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த ரெய்டை நடத்துகிறார்கள் என்றும், இதனை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும் என கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர் எஸ் பாரதி கூறியதாவது:-
"ஆடத் தெரியாதவன் கூடை கொத்தான்" என பழமொழி சொல்வார்கள். அது போல இப்போ அவர் ஆட்சிக்கு வந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியவில்லை. பழிவான்கும் நோக்கத்தோடு செய்கிறார். எ.வ வேலு அவர்கள் முதல்வர் விஜய்யிடம் நேருக்கு நேர் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். மறுநாளே இன்னைக்கு இப்போது ரெய்டுக்கு வந்துவிட்டார்கள்.
சட்ட ரீதியாக சந்திக்கும்
இது எல்லாம் நாங்க பாத்து பாத்து அலுத்துப் போன விஷயம்.. 50 ஆண்டுகளாக பார்த்தது தான். எங்க வீடுகளுக்கு எல்லாம் பலமுறை ரெய்டுக்கு வந்து இருக்கிறார்கள். ஆனால் எங்க வீட்டுக்கு ரெய்டுக்கு வந்தவர்களுக்கு நாங்க சீட் கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கி, அமைச்சர் ஆக்கவில்லை..
1977-இல் இருந்து எங்க வீட்டுக்கு பல பேர் ரெய்டுக்கு வந்து இருக்கிறார்கள். பிறகு நாங்க 5 முறை ஆட்சிக்கு வந்து இருக்கிறோம். ஆனால் எங்க வீட்டுக்கு ரெய்டு வந்தவங்களிடம், கையில் காலில் விழுந்து, என்னை விட்டுவிட்டு போயிடு.. அப்படி என்று கெஞ்சி பிறகு வந்த பிறகு எம்.எல்.ஏ சீட் கொடுத்து பிறகு மந்திரி ஆக்கிய கேவலமான காரியங்களை எல்லாம் திமுக செய்தது கிடையாது. இதனை திமுக சந்திக்கும். சட்ட ரீதியாக சந்திக்கும்.
சின்னப் பசங்களுக்கு எல்லாம் தெரியாது
நாங்க சவால் விட்டு காலரை தட்டி சொல்கிறோம். 1977 முதல் எங்கள் மீது போடப்பட்ட எந்த வழக்குகளிலும் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே எங்க தலைவர் குறிப்பிட்டு சொன்னது போல சட்ட ரீதியாக சந்தித்து, தூள் தூள் ஆக்கி.. இவர் யார், இவர் இன்கம் டேக்ஸ் ரெய்டு வரும் போது என்னென்ன செய்தார் என்பது எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.
1977-ல் கருணாநிதியின் வீட்டில் ரெய்டு நடத்தியபோது, நான் கூடவே இருந்து பார்த்தவன். இன்னைக்கு இருக்கின்ற சின்னப் பசங்களுக்கு எல்லாம் இது தெரியாது" என்று ஆர் எஸ் பாரதி பேசினார்.
எதற்காக இந்த சோதனை?
முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது பொதுப்பணித்துறையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள லஞ்சம் பெறப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் கூறியதன் அடிப்படையிலேயே இந்த லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
எ.வ வேலு, தற்போது திருவண்ணாமலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று கட்சியின் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தான் இன்று அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.















Click it and Unblock the Notifications