எடப்பாடியை வசமாக சிக்க வைக்க வியூகம்? வக்கீலை மாற்றும் ஆர்.எஸ்.பாரதி தரப்பு.. நடந்தது என்ன?
டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு வழக்கில், தனது தரப்பு வழக்கறிஞரை மாற்றவிருக்கிறார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் உச்சமடைந்து, மாறி மாறி இருதரப்பினரும் கட்சியை விட்டு நீக்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒன்று நெருக்கி வருகிறது.
டெண்டர் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்து ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

எடப்பாடி மீதான வழக்கு
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கியதாகவும், இதில், 4,800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்திலும் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்தார்.

சிபிஐ விசாரணை
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலேயே வருவதால் வெளிப்படையான விசாரணைக்காக சி.பி.ஐ. விசாரணைக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இடைக்காலத் தடை
இதனையடுத்து, சி.பி.ஐ விசாரணைக்காக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில் இவ்வழக்கை விரைவாக விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடப்பட்டது.

வழக்கறிஞர் மாற்றம்
இதனையடுத்து, இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்க பட்டியலிடப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று 15வது வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில், "இந்த வழக்கில் எங்களது வழக்கறிஞரை மாற்ற வேண்டி இருப்பதால் 3 வார கால அவகாசம் தர வேண்டும்" என்று கோரப்பட்டது.

ஈபிஎஸ் தரப்பில்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என்பது தொடர்பான தகவல் எங்களிடம் பகிரப்படவில்லை. எனவே நாங்கள் விசாரணைக்கு தயாராகவில்லை. எங்களுக்கும் அவகாசம் வேண்டும் என்பதால் வழக்கைத் தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி
இதனையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, விசாரணைக்கு 3 வாரம் கால அவகாசம் அளிக்க முடியாது எனக் கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications