கண்ணம்மாபேட்டையில் வெற்றியை பார்த்துவிட்டு.. நாதழுதழுக்க சைதை துரைசாமி பேசிய அந்த வார்த்தை!
சென்னை: தனது மகன் வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி செய்தியாளர்களை சந்தித்த போது நாதழுதழுக்க அழுதார். அவரை உடனிருந்தவர்கள் தேற்றினர்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் சென்னை முன்னாள் மேயருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. இவர் "என்றாவது ஒரு நாள்" என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் தனது அடுத்த படத்தை இயக்குவதற்காக இமாச்சல் பிரதேசத்திற்கு தனது உதவியாளருடன் லொகேஷன் பார்க்க சென்றிருந்தார்.

அங்கு அவர்கள் இருவரும் வாடகை காரில் சென்ற போது ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென கார் தாறுமாறாக ஓடி 200 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்தது. இதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். வெற்றியின் உதவியாளரும் நண்பருமான கோபிநாத் காயங்களுடன் ஆற்றின் கரையில் மீட்கப்பட்டு சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் வெற்றியை மட்டும் காணவில்லை என்பதால் அவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை அறிந்த வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி இமாச்சல் சென்றிருந்தார். அங்கு மீட்பு பணிகளை பார்வையிட்ட அவர் தனது மகனுக்காக காத்திருந்தார். தனது மகன் கிடைக்காததால் அவரை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெற்றியின் புகைப்படத்தை உள்ளூர் மக்களிடமும், பழங்குடியின மக்களிடமும் போலீஸார் கொடுத்து தேட சொன்னார்கள். ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியும் நடைபெற்றது. கார் விழுந்த இடத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திற்கு தேடினர். ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. அவருடைய ஐபோனும் உடமைகளும் பெட்டியும் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து நேற்று முன் தினம் 8-ஆவது நாள் மீண்டும் தேடுதல் வேட்டை நடந்தது.
அப்போது ஸ்கூபா டைவ் வீரர்களை கொண்டு ஆற்றின் ஆழத்தில் வெற்றியை தேடும் பணிகள் நடந்தன. ஒரு இடத்தில் தண்ணீரில் இருந்து ஒரு கை தெரிந்தது. உடனே அது என்ன என பார்த்த போது ஒரு பாறையின் அடியில் ஒரு உடல் சிக்கியிருந்தது. அதை கரைக்கு கொண்டு வந்த போது வெற்றி என அடையாளம் காணப்பட்டது. இதை போலீஸ் உயரதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.
வெற்றியின் உடல் நேற்றைய தினம் சண்டீகரில் இருந்து நாக்பூர் வந்து அங்கிருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் வந்தது. நேற்று மாலை 4 மணிக்கு அவருடைய உடல் வந்ததும் பொது மக்கள் அஞ்சலிக்காக தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள வெற்றியின் வீட்டில் வைக்கப்பட்டு அங்கிருந்து சென்னை சிஐடி நகர் வீட்டில் வைக்கப்பட்டது.
வெற்றியின் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், சசிகலா, திவாகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முதல்வரும் சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவருடைய உடல் மாலை 6 மணிக்கு கண்ணம்மாபேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் சைதை துரைசாமி பேசினார். அவர் கூறுகையில் எனக்கு ஆறுதல் சொல்ல வந்த அத்தனை பேருக்கும் நன்றி. சக மனிதனுக்காக வாழ வேண்டும்.
இங்குள்ள 259 ஜாதிகளில் 170 ஜாதியினர் அரசு பணிகளில் உள்ளனர். மீதமுள்ள 89 பிரிவுகளில் உள்ளவர்களையும் அரசு பணியில் அமர வைப்பேன் என இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். நான் போக வேண்டாம் என சொன்னேன். நான் அழுத்தமாக சொன்னால் எப்போதும் கேட்கும் என் மகன் இதுதான் கடைசி என்றான்.
அவன் சொன்னது போல் இப்படி ஒரு கடைசி பயணமாக இது முடியும் என நான் ஒரு காலும் நினைத்ததில்லை. மனம் கலங்க மாட்டேன், எனக்கு ஒரு மகன் போனாலும் ஐஏஎஸ் படித்த மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள், நான் இத்தனை மகன்களை பெற்றிருக்கிறேன் என்றார். ஒரு மகன் போனாலும் என சைதை துரைசாமி சொன்னபோது நா தழுதழுக்க அழுதுக் கொண்டே சொன்னார். அப்போது அவருடன் இருந்த ஆதரவாளர்கள் அண்ணா வேண்டாம் வேண்டாம் என அழுதவாறே ஆறுதல் கூறி தேற்றினர்.












Click it and Unblock the Notifications