அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் கொடி! புதிய கட்சியை தொடங்கினார் சசிகலா
கமுதி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் புதிய கட்சியை தொடங்கினார் வி.கே.சசிகலா. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போதும் என்றும் சசிகலா பேசினார். கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார் இதையடுத்து கமுதியில் நடந்த மாநாட்டில் சசிகலா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஓபிஎஸ் மீது எந்த குறையும் இல்லை. தற்போது அவரை ஒரு கும்பல் நெருக்கி வருகிறது. முதல்வராக உட்கார வைத்தவர் என் முதுகில் குத்தினார். அவரின் பெயரை கூட சொல்ல நான் விரும்பவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. யாரிடமும் என் என் கோபத்தை காட்டுவதில்லை. அது எம்ஜிஆரின் பழக்கம். பெங்களூர் சிறையில் எனக்கு தினமும் பிரச்சினைகள் நடந்தன.
என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத போது எனக்கு பரோல் கிடைத்தது. சிறை நிர்வாகம் 15 நாட்கள் கெடு கொடுத்தது. ஆனால் தமிழக முதல்வராக இருந்தவர் (எடப்பாடி) எனக்கு 5 நாட்கள் பரோல் போதும் என்றார்.
நான் தமிழக சிறையில் இருந்திருந்தால் உயிருடன் இருந்திருப்பேனா என உறவினர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்க கூடாது உள்பட 14 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஓபிஎஸ் மீது எந்த குறையும் இல்லை. அவரை தற்போது ஒரு கும்பல் நெருக்கி வருகிறது. 9 ஆண்டுகளாக நான் அமைதியாக இருந்தது போதும். இனியும் மக்களுக்கு நடக்கும் துரோகத்தை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
புதிய களத்தை காண்போம். புதிய கட்சியை தொடங்குகிறேன். கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கிறேன் என கூறிய சசிகலா, கருப்பு, வெள்ளை, சிகப்பு கொடியில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா முகம் பொரித்த கொடியை அறிமுகம் செய்தார்.
ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளாக பயணித்தவர் சசிகலா. அவரது மறைவுக்கு பிறகு 2017ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார். அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட இருந்த போது, ஓபிஎஸ், அவருக்கு எதிராகத் தர்மயுத்தம் நடத்தினார்.
எனினும் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அவர் முதல்வராக பதவியேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்துக் கொண்டிருந்த போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, சிறைக்கு செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து இரண்டாக பிரிந்திருந்த அதிமுக ஒன்றிணைய சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அன்று முதல் அதிமுகவில் இணைய முயன்றும் முடியவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஒருங்கிணைந்த அதிமுகவாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரைச் சந்தித்து வந்த சசிகலாவின் புதிய கட்சித் தொடக்கம், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றங்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த கட்சி தேர்தலுக்குள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுவது சந்தேகம் என ஏற்கெனவே டிடிவி தினகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு கட்சியை பதிவு செய்ய 6 மாதங்களாவது ஆகும் என்றும் அவர் சசிகலாவின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications