அரசியல் துறவறம் : மகாசிவராத்திரியில் அகஸ்தியர் கோவிலில் வழிபட்டு ஆன்மீக பயணம் கிளம்பும் சசிகலா
அரசியல் துறவறம் பூண்ட சசிகலா ஆன்மீக பயணம் கிளம்பப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாசிவராத்திரி நாளில் தியாகராயநகரில் உள்ள அகஸ்தியர் கோவிலில் சிவ தரிசனம் செய்து விட்டு ஆன்மீக பயணம் கிளம்பப்போகிறாராம்.
சென்னை: சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். அவரது விலகல் சசிகலாவுக்காக காத்திருந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் பலரும் நம்பிக்கொண்டிருக்கும் பலருக்கும் பேரிடியை தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் துறவறம் பூண்ட சசிகலா மகாசிவராத்திரி நாளில் ஆன்மீக பயணம் கிளம்பப்போகிறாராம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்தோழி, உடன்பிறவா சகோதரி என்றும் அழைக்கப்பட்டவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சின்னம்மாவானார். அதிமுக பொதுச்செயலாளராக முடிசூட்டிகொண்டார். முதல்வராக ஆசைப்பட்டார்.
சசிகலாவின் முதல்வர் ஆசையில் இடியைப் போட்டது உச்சநீதிமன்றம். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாகவே பெங்களூரு சிறைக்குப் போனார். சிறை செல்லும் முன்பாக ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சபதம் செய்தார்.

தீவிர அரசியல்
சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி பெங்களூருவில் ஓரு வாரம் ஓய்வெடுத்தார். ஓய்வுக்குப் பிறகு பிப்ரவரி 8ஆம் தேதியன்று பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பினார். வழி நெடுக கிடைத்த உற்சாக வரவேற்பை பார்த்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

வந்துட்டேன்னு சொல்லு
சசிகலாவின் பேச்சு பலருக்கும் பல செய்திகளை சொல்வது போல இருந்தது. அன்புக்கு மட்டுமே நான் அடிமை என்று சொன்ன சசிகலா,அடக்குமுறைகளுக்கு தான் அஞ்சப்போவதில்லை என்று சொன்னார். தமிழகம் முழுவதும் பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பேன் என்று சொன்னார். சென்னையில் தங்கியிருந்த சசிகலாவை சில பிரபலங்கள் போய் சந்தித்தனர்.

பிறந்தநாள் செய்தி
ஜெயலலிதா பிறந்தநாளன்று சென்னையில் அஞ்சலி செலுத்திய சசிகலா, அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் என்று சொன்னார். அவரது அறிக்கையிலும் அதிமுக கொடியும், பொதுச்செயலாளர் சசிகலா என்றும் இருந்தது பல கேள்விகளை எழுப்பியது. சசிகலா தலைமையில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம் என்று சொன்னார் டிடிவி தினகரன்.

ஒதுங்கிய சசிகலா
தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சொன்ன சசிகலா திடீரென அரசியலை விட்டு விலகப்போவதாக அறிக்கை வெளியிட்டார். பொதுவாகவே முக்கிய அறிவிப்புகளை செய்தியாளர்களை சந்தித்து வெளியிடுவதுதான் சசிகலாவின் பாணி. இரவு நேரத்தில் கூட சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். ஆனால் மிக முக்கியமான முடிவான அரசியல் ஓய்வு அறிவிப்பை ஒரு அறிக்கை மூலம் அறிவித்தது பலருக்கும் பலவித சந்தேகங்களை எழுப்பியது.

சசிகலா ஓய்வு ஏன்
ஜெயலலிதா இருந்தவரைக்கும் அவரது பின்னால் இருந்து அரசியல் செய்து வந்தவர் சசிகலா. சசிகலாவை வைத்து அவரது உறவினர்கள் 30 ஆண்டுகாலம் பிழைத்துக்கொண்டனர். முதல்வராக வேண்டும் என்று ஆசைப்பட்ட நேரத்தில்தான் சசிகலாவின் வீழ்ச்சி தொடங்கியது. சிறை சென்றார். கணவர் உள்பட உறவினர்கள் பலரையும் இழந்தார். மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. உடல்நிலையை கருத்தில் கொண்டே அவர் அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

அகஸ்தியர் கோவில்
சசிகலா சென்னையில் இரண்டு கோவில்களுக்கு அடிக்கடி சென்று வழிபடுவார். தி. நகரில் உள்ள அகஸ்தியர் கோவிலிலும், திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமி கோவிலிலும் சென்று மணிக்கணக்கில் வழிபடுவார் சசிகலா. நாளை மகாசிவராத்திரியை முன்னிட்டு சசிகலா அகஸ்தியர் கோவிலுக்கு சென்று வழிபடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவில் கோவிலாக பயணம்
மாசி அமாவாசையில் குல தெய்வ வழிபாட்டை முடித்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள பல முக்கிய கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்லப்போகிறாராம் சசிகலா. அரசியல் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஒரேடியாக சசிகலா பூண்ட துறவறம் அமமுக தொண்டர்களை அதிமுகவின் பக்கம் சாய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications