விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கையா? சத்யபிரதசாஹு விளக்கம்
சென்னை: விருதுநகர் லோக்சபா தொகுதியில் மறு எண்ணிக்கைக்கு தேமுதிக விண்ணப்பித்திருந்ததாக சொல்லப்படும் நிலையில் அதுகுறத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹு விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விருதுநகர் லோக்சபா தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து தேமுதிகவின் புகார் மனு எதுவும் வரவில்லை.

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் உயர்நீதிமன்றத்தைத்தான் நாட முடியும். விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்கும் என சத்யபிரதசாஹு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார். மாணிக்கம் தாகூருக்கு கடுமையான டஃப் கொடுத்தார் விஜய பிரபாகரன். சுருக்கமாக சொல்ல போனால் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு பயம் காட்டினார் என்றே சொல்லலாம். கடைசியில் நடந்த ட்விஸ்ட்டாக விஜய பிரபாகரன் குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரனுக்கு எதிராக சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா அளித்த பேட்டி அளித்த போது, விஜய பிரபாகரன் தோற்கவில்லை.
அவர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது.
அது போல் நள்ளிரவில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மற்ற தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் இவ்வளவு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது சூழ்ச்சி! விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது. தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் செல்போனை அணைத்து வைப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இது குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் அளித்துள்ளோம். மேலும் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கேட்டிருக்கிறோம். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications