தினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு
சென்னை: நாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது எஸ்.டி.பி.ஐ. கட்சி.
சோசியல் டெமோக்ரட்டிக் பிரண்ட் ஆப் இந்தியா என்பதன் சுருக்கமே எஸ்.டி.பி.ஐ. ஆகும். இந்தியா முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இந்தக் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டது. திமுகவின் தயாநிதிமாறனையும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம்பாலையும் எதிர்த்து போட்டியிட்டார் தெஹ்லான் பாகவி.

கடந்த தேர்தலில் அமமுகவுடன் யாரும் கூட்டணி சேரத் தயங்கிய நிலையில், நாங்கள் இருக்கிறோம் கவலைவேண்டாம் எனக்கூறி தினகரனுடன் கூட்டணி வைத்தது எஸ்.டி.பி.ஐ. கட்சி. இதனிடையே அமமுக இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தற்போதைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கும், நாங்குநேரியில் ரூபி மனோகரனுக்கும் எஸ்.டி.பி.ஐ. தொண்டர்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என இன்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணையவிருந்த எஸ்.டி.பி.ஐ கட்சி 3 தொகுதிகளை கேட்டது. ஆனால் அறிவாலயத்தரப்பில் 1 சீட் மட்டுமே என்பதில் உறுதியாக இருந்ததால் அப்போது திமுக கூட்டணியில் இடம்பெற முடியாமல் போனது. இப்போது அரசியல் கள யதார்த்தத்தை உணர்ந்து திமுக காங்கிரஸுக்கு எஸ்.டி.பி.ஐ.ஆதரவு அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications