நம்ம ஸ்கூல் திட்டம் ஒ.கே! ஆனால் அந்த தொழிலதிபர் எதற்கு? விசிகவை தொடர்ந்து எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு!
சென்னை: கல்விப் பணிகளில் எந்த பெரும் பங்களிப்பையும் ஆற்றாத தனியார் தொழில் அதிபரை நம்ம ஸ்கூல் திட்டத்தில் முக்கிய பொறுப்பில் நியமித்திருப்பது ஏன் என எஸ்.டி.பி.ஐ. கட்சி வினவியுள்ளது.
வேணு சீனிவாசன் நியமனத்துக்கு விசிக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தொழில் அதிபர் வேணு சீனிவாசன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதனிடையே இது தொடர்பாக நெல்லை முபாரக் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்
முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிச.19 அன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அரசு சாராத, தனியார் தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தித் தர முடியும் என்று அந்த திட்டத்தின் நோக்கத்தை தமிழக அரசு கூறியுள்ளது.

தொழில் அதிபர்
அரசுப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவது என்பது அரசின் முக்கிய கடமை என்கிற நிலையில், தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளுக்கான கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கையாக அரசால் தொடங்கப்பட்ட நம்ம ஸ்கூல் அறக்கட்டளைக்கு, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கல்விப் பணிகளில் எந்த பெரும் பங்களிப்பையும் ஆற்றாத தனியார் தொழில் அதிபரை நியமித்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

தனியார் சமூக பங்களிப்பு
அதேபோல் அரசுப் பள்ளிகளை தனியார் சமூக பங்களிப்பு மூலம் மேம்படுத்த வேண்டும் என்கிற பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டம் உள்ளது என்கிற குற்றச்சாட்டையும் எளிதில் புறக்கணிக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கை
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள தமிழக அரசு, மறுபுறம் புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைக்களுக்கு இசைவாக இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் உள்ளன என்றும், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டமும் அந்த அடிப்படையிலானது தான் என்றும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

அரசு விலகிச் செல்லும்
முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அவரவர் படித்த மற்றும் அவரவர் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது என்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை தான். ஆனால், அதற்கான உதவிகளை பெற்று அரசே நேரடியாக செய்யாமல், தனியார் தொழில் அதிபரை இயக்குநர்களாக கொண்ட அறக்கட்டளை மூலமாகத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. இது அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் பொறுப்பில் உள்ள கடமையிலிருந்து அரசு விலகிச் செல்லும் திட்டமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

நல்ல நோக்கம்
அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் நல்ல நோக்கத்தை தனியாரிடம் ஒப்படைத்து பொறுப்பிலிருந்து விலகுவது மிகவும் ஆபத்தானதாகும். அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் எனக்கூறி சிறப்பு ஆசிரியர்களை இந்த பவுண்டேஷன் மூலம் நியமித்தால் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலிருந்தும் அரசு விலகிவிடும் ஆபத்தும் உள்ளது.

எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
பள்ளி ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரை உட்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, தமிழகத்தை ஆட்சி செய்த முன்னோர்களின் பெரும் முயற்சியால் உருவான அரசுப் பள்ளிகளை தமிழக அரசே பாதுகாத்து, அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications