அனைவரது பசியை ஆற்றினார்,, நடிகர் சங்கத்தை மீட்டார்! விஜயகாந்த் மறைவுக்கு சீமான், அன்புமணி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டு உள்ள இரங்கலில், "தமிழ்த் திரைத்துறையில் தமது கம்பீரமான நடிப்பாற்றலால் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்த ஆகச்சிறந்த திரைக்கலைஞர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

Seeman, Anbumani condole death of DMDK president Vijayakanth

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றிருந்தபோது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் கனிவுமிக்கப் பெருங்குணத்தாலும், நிர்வாகத் திறமையாலும் கோடிக்கணக்கான ரூபாய் கடனிலிருந்து நடிகர் சங்கத்தை மீட்ட பெருமைக்குரியவர். தம் நண்பர்கள் பலரின் திரைத்துறை வளர்ச்சிக்கு காரணமாகத் திகழ்ந்த பெருந்தகை. தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி. தமிழ்த்திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் அவர் படைத்த சாதனைகள் காலத்தால் அழியாதவை. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் என்றென்றும் நீங்காது நிலைத்திருக்கும்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் அம்மையார் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அன்புத்தம்பிகள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரில் பங்கெடுக்கிறேன். அன்புச்சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்து உள்ள இரங்கலில், "தே.மு.தி.கவின் நிறுவனரும், தலைவருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, அனைவரின் மனங்களையும் வென்றவர் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அதன் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தவர். அதன்பின் 2005 ஆம் ஆண்டில் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர்.

என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் மீதும் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர். கடந்த 2019 ஆம் ஆண்டில் அவர் உடல்நலம் பாதித்திருந்த போது அவரை மருத்துவர் அய்யா அவர்களுடன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பும், உறவும் இயல்பானதாக தொடர்ந்தது.

அரசியலையும், திரைவாழ்வையும் கடந்து விஜயகாந்த் மிகவும் அற்புதமான மனிதர். அனைவரையும் சமமாக மதித்தவர். அனைவரிடமும் அன்பு காட்டியவர். உடல்நலக் குறைவால் ஒவ்வொருமுறையும் மருத்துவமனையில் அனுமதிகப்படும் போது, அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதும், உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துவதும் வழக்கம். இப்போதும் வழக்கமான மருத்துவ ஆய்வுக்காகவே மருத்துவமனையில் அவர் சேர்க்கபட்டிருப்பதாக அறிந்த நிலையில், ஒரிரு நாட்களில் வீடு திரும்புவார்; அரசியல் பணியை தொடர்வார் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நம்ப முடியவில்லை; தாங்க முடியவில்லை. அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளரும், மனைவியுமான சகோதரி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+