போங்க தம்பி.. சீமான் சொன்னது தான் தாமதம்! உதயநிதி முன் உடன்பிறப்புகளான தம்பிகள்! அந்த வேட்பாளருமா?
சென்னை: நாம் தமிழர் கட்சிகள் இருந்து நிர்வாகிகள் விலகுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் தம்பிகள் திமுகவில் ஐக்கியம் ஆகினர். இந்த நிலையில் நாம் தமிழர் வேட்பாளர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். பெரியார் தான் வேண்டுமென்றால் கட்சியை விட்டு போங்கள் என சீமான் சொன்ன அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த பிளவு ஏற்பட்டிருக்கிறது.
சீமானின் செயல்பாடுகளால் ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக, அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர் தம்பிகள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மூவாயிரத்திற்கு மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை விட்டு விலகுவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர். மேலும், திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர்.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன், இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகினர்.

இந்த நிலையில் தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. மேலும் பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் தொடர்பாக சீமான் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருவது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் தான் வேண்டும் என்றால் கட்சியை விட்டுப் போங்கள் என பேசி இருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக 2021 சட்டமன்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும், மண்டல செயலாளருமான மகாலிங்கம் திமுகவில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அரியலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஐயப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் விஜயகுமார், அரியலூர் மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் அஜித் குமார் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் மேலும் பல நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறுகின்றனர் நாம் தமிழர் தம்பிகள்.












Click it and Unblock the Notifications