கருவாடு மீனாகாது.. காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு அதிமுக துடிக்கிறாங்களே.. செல்வ பெருந்தகை புது குண்டு
சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைப்பதற்காக அதிமுக துடியாக துடிப்பதாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வ பெருந்தகை கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி முதன்முறையாக தெலங்கானாவில் ஆட்சி அமைத்துள்ளது. கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கி பாஜக வெற்றி பெற்றது.

சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து தேசிய அரசியல் களம் அனல் பறக்க விவாதித்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பாஜகவின் பலம் கூடியிருக்கிறது. இக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே 2024 லோக்சபா தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று அசுர பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்ற பேச்சை அக்கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
5 மாநில தேர்தல் வெற்றி யாருக்கு சாதகம் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ், அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு பேசினர். அதிமுகவை சேர்ந்த நிர்வாகி பேசும் போது.. "கடல் வற்றி கருவாடு மீனாகும்.. ஆனால் காங்கிரஸ் கட்சி நாடாளாது" என்று கூறினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வபெருந்தகை, அப்படி இருக்கும் போது அதிமுக ஏன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க துடியாக துடிக்கிறது என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர்களுடன் பேச அப்பாயிண்ட் மெண்ட் கேட்டு அதிமுக தலைவர்கள் காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.
அதற்கு அதிமுக நிர்வாகியோ, அப்போது ஊடக செய்தியை வைத்துதான் பேசுகிறீர்களா? ராகுல்காந்தியுடன் நேரடி தொடர்பு எதுவும் இல்லையா என்று கேட்டார். உடனே சமாளித்து, டெல்லி தலைமையிடம் இருந்தும் தகவல் வந்திருக்கிறது. உங்கள் தலைவர்கள் கிட்ட பேசுங்க காங்கிரஸ் கட்சி யார் யாரிடம் கூட்டணி வைக்க பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரியும் என்றார் செல்வ பெருந்தகை.
அதற்கு அதிமுக நிர்வாகியோ இப்படி ஒரு பச்சையான பொய்யை அரங்கத்தில் சொல்லக்கூடாது என்று கூறினார். அவர் எவ்வளவுதான் சொன்னாலும் இது பொய் என்று நான் மறுக்கிறேன் என்று கூறினார். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் வலிமையாகவே உள்ளது. பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் வலிமையாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி கடந்த சில மாதங்களுக்கு முன்பே உடைந்து விட்டது. இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளனர். வரும் 26ஆம் தேதி அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications