செங்கோட்டையன் அடுத்தகட்ட பிளான் என்ன? 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டம்!
சென்னை: அதிமுகவின் கட்சி பதவிகளில் இருந்து செங்கோட்டையன் நேற்று நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறார். வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் கடந்த 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், "வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களோடு இணைந்து பணியாற்றுவோம், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று பல்வேறு மேடைகளில் கடிதங்களில் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் எந்தப் பொறுப்பும் தேவையில்லை என அவர்கள் சொல்லும்போது, நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

செங்கோட்டையன் புயல்
10 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் அதுவரை பங்கேற்க மாட்டேன்" என்று பேசி இருந்தார். இது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த மறுநாளே செங்கோட்டையன், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் அவர் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.
எடப்பாடி அதிரடி
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று காலை திண்டுக்கல்லில் முகாமிட்டிருந்தார். அங்கே ஒரு தனியார் ஹோட்டலில் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக செங்கோட்டையனை அவர் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "இந்த அறிவிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்பது தொண்டர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு. அதை வெளிப்படுத்தும் விதமாகத் தான் நான் பேசியிருந்தேன். அதற்கு இன்று கழகத்தின் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவித்துள்ளார்கள்.
செங்கோட்டையன் பேட்டி
ஜனநாயக முறைப்படி கட்சியிலிருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். விளக்கம் கேட்காமலே என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நாங்கள் ஜனநாயகத்தை காக்கிறோம், சுயமரியாதையோடு யாரும் எங்கள் கட்சியில் கருத்து தெரிவிக்கலாம் எனப் பல மேடைகளில் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.
என்னுடைய பணி நான் சொன்னதை நோக்கி தான் தொடரும். சிலர் என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். நாங்கள் 6 பேர் பொதுச் செயலாளரை சந்தித்தது உண்மை என அன்றே தெளிவுபடுத்தி இருக்கிறேன். பொதுக்குழுவை கூட்டினால் தான் அதில் பேச முடியும். நேற்று நான் பேசுகையில் 10 நாட்களுக்குள் இந்தப் பணியை துவங்க வேண்டும் என்று தான் கூறினேன். எனது கருத்துக்கு ஆதரவாகப் பலரும் பேசியுள்ளனர். நான் பேசியது கட்சியின் நலனுக்கானது, என் நலனுக்காக அல்ல" எனத் தெரிவித்தார்.
முக்கிய முடிவை அறிவிக்கும் செங்கோட்டையன்
இந்நிலையில், செங்கோட்டையன் வரும் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications