அப்படி ஒரு கேள்வியே வரல.. நீதிபதி எங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுள்ளார்: மூத்த வழக்கறிஞர் பரபர பேட்டி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கில், சென்னை ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அமர்வு, ஒருவருக்கொருவர் மாறுபட்ட தீர்ப்பினை அளித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு பற்றி மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

மாறுபட்ட தீர்ப்புகள்: இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்று நீதிபதி பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளனர். இதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் கருத்துக்கு இந்த வழக்கு செல்ல உள்ளது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இருவருமே, சட்டவிரோதமானதாக கைது இருந்தால் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு நிலைக்கத்தக்கது என ஒரே மாதிரியான தீர்ப்பை கொடுத்துள்ளனர். 2 நீதிபதிகளும் மற்ற விஷயங்களில் மாறுபட்ட தீர்ப்பை கொடுத்துள்ளனர்.
கேள்வியே எழவில்லை: அமலாக்கத்துறைக்கு, போலீஸ் கஸ்டடியில் எடுக்க அதிகாரம் இல்லை என நிஷா பானு அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். எனவே அவருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கப்பட முடியாது, எனவே செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை கழித்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியே எழவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையில் சட்ட விதி மீறல் இருக்கிறது. எனவே அவரை உடனடியாக விடுவித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதேவேளையில், நீதிபதி பரத சக்கரவர்த்தி, இந்த சூழலில் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல, அமலாக்கத்துறைக்கு அவரை விசாரணையில் எடுக்க அதிகாரம் உள்ளது.
அவர் மருத்துவமனையில் இருந்து வரும் காலத்தை விசாரணை காலத்தில் கழித்துக் கொள்ளலாம், அவர் மேலும் 10 நாட்கள் காவேரி மருத்துவமனையில் தொடரலாம், உடல்நிலை சீரான பிறகு சிறைச்சாலை மருத்துவமனையிலேயே மருத்துவம் செய்து கொள்ளலாம். அவரது உடல்நிலை முற்றிலும் சீரான பிறகு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்ற மாறுபட்ட கருத்தை பதிவு செய்துள்ளார்.
முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்: உயர் நீதிமன்ற விதிமுறைகளின்படி, 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில், மாறுபட்ட தீர்ப்புகள் வந்தால், தலைமை நீதிபதியிடம் இந்த தீர்ப்புகள் வைக்கப்பட்டு, மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படும். அது எப்போது? எந்த நீதிபதிக்கு அனுப்பப்படும் என்பதை ஐகோர்ட் தலைமை நீதிபதியே முடிவு செய்வார்.
2 நீதிபதிகளில் ஒரு நீதிபதி, எங்களது வாதங்களை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார். சட்டவிரோத கைது மட்டுமல்ல, அமலாக்கத்துறைக்கு போலீஸ் கஸ்டடியில் எடுக்கும் அதிகாரமும் இல்லை என்பதை நீதிபதி நிஷா பானு தெரிவித்திருக்கிறார். முழு உத்தரவு இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications