நீட் என்றாலே கொள்ளையடிப்பது 'லூட்'தான்.. பத்திரிகையாளர் என்.ராம் கடும் தாக்கு
சென்னை: நீட் என்றாலே லூட் என்றாகிவிட்டது; நீட் பயிற்சி மையங்கள் நோக்கமே கொள்ளையடிப்பதுதான் என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் சார்பில் 'நீட்' எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று நடை பெற்றது. இந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேசியதாவது:

நீட் பயிற்சி மையங்களின் நோக்கம் கொள்ளையடிப்பதும், சுரண்டுவதும்தான். மருத்துவக் கல்வி மீதான மக்களின் தாகத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. நீட் என்றாலே "லூட்" என்றாகிவிட்டது. கிராமப்புறங்கள், பட்டியலின, பழங்குடி சமூக மாணவர்களால் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. பணம் படைத்தவர்கள் மட்டுமே பயிற்சி மையங்களில் சேர முடியும். இதனால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. சமூக நீதி பறிக்கப்படுகிறது.
நீட் தேர்வில் 2020 - 2023 ஆண்டுகளில் சராசரி மதிப்பெண் 259 முதல் 297 வரை இருந்தது. இந்த ஆண்டு அது 323.55 ஆக உயர்ந்துள்ளது. முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் செங்குத்தாக உயர்ந்துள்ளது. மதிப்பெண்கள் வழங்கப்பட்டதிலும் தவறு உள்ளது. இந்த விவரங்கள் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை.
நீட் தேர்வின் நம்பகத்தன்மை அரித்துபோய் விட்டது. இடதுசாரி மாணவர் அமைப்புகள் மட்டுமின்றி, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்புகள் கூட எதிர்க்கின்றன. மாநில உரிமைகளை நீட் பறிக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மீது பாஜக அரசு போர் நடத்துகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதலை வழங்காதது ஏமாற்ற மளிக்கிறது.
24 லட்சம் பேர் நீட் எழுதும் நிலையில் ஊழலை தடுக்க முடியாது. இதில் நடைபெறும் மிகப் பெரிய ஊழலை தடுக்க தற்போதுள்ள கட்டமைப்புகளால் முடியாது. நீட் விஞ்ஞான முறையிலான தேர்வும் அல்ல. அதில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. மாநில உரிமைகளை பறிக்கிறது. சமூக நீதிக்கு எதிராக உள்ளது. எனவே, நீட் தமிழகத்திற்கு மட்டு மல்ல இந்தியாவிற்கே தேவையற்றது. நீட்டுக்கு எதிரான போராட்டத்தை பிற மாநிலங்களும் தொடர வேண்டும். (நன்றி: தீக்கதிர் நாளிதழ்).












Click it and Unblock the Notifications