வங்கி ஆவணங்கள்.. அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி புதிய மனுக்கள்! அமலாக்கத்துறைக்கு போன உத்தரவு
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து, செந்தில் பாலாஜியை விடுவிக்கும் உத்தரவு இன்றைய தினம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு எகிறிவிட்டது.
ஒரு வருடத்துக்கும் மேலாக, நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்களை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இதையடுத்து, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். பிறகு இந்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி, பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மற்றொரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை: அந்த மனுவில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை இதே கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது. இந்த மனு மீதான முடிவு வரும்வரை அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது
எதிர்பார்ப்பு: இந்த மனுவானது, கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது.. இதனை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்தார்..
அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த 12ம் தேதியே முடிவடைந்ததை தொடர்ந்து 46வது முறையாக அவருடைய நீதிமன்ற காவலை ஜூலை 16 ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். எனவே இன்றைய தினம் நீதிமன்றம் தரப்போகும் உத்தரவானது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
2 மனுக்கள்: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோரிக்கை: மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இந்த மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளை மறுநாள் அதாவது ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications