புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. பிணை உத்தரவாதத்தை ஏற்றது நீதிமன்றம்
சென்னை: செந்தில் பாலாஜி பிணைப் பத்திரங்களை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டதற்கு செந்தில் பாலாஜி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, பிணை உத்தரவாதங்களை ஏற்க ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்ததை அடுத்து செந்தில் பாலாஜி பிணை உத்தரவாதங்களை ஏற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீனில் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 471 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்து வந்தன. இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்: கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை 10:30 மணிக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு.
செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஜாமீன் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்து, 2 நபர்கள் ரூபாய் 25 லட்சத்துக்கான ஜாமீன் அளித்துள்ளனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும். அதுதான் நடைமுறை.
இதற்கிடையே இன்று காலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார் செந்தில் பாலாஜி. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், உச்சநீதிமன்ற ஜாமீன் தீர்ப்பை சுட்டிக்காட்டினார். அதையடுத்து, உச்சநீதிமன்ற ஜாமீன் நகல் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார்.
ஏற்க மறுத்த நீதிபதி: மேலும், நீதிமன்ற காவல் நீட்டிப்பு உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, வழக்கு இன்று பிற்பகலில் விசாரிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் சற்று முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சில குழப்பங்கள் உள்ளன. பிணை உத்தரவாதங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை, ஜாமீன் உத்தரவாதங்களை அமலாக்கத்துறை விசாரணை அதிகாரியிடம் தாக்கல் செய்யுங்கள் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜி தரப்பிடம் தெரிவித்தார்.
முடிவு பண்ணிட்டீங்களா?: நீதிபதியின் இந்த முடிவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. செந்தில் பாலாஜி இன்று வெளியே வரக்கூடாது என முடிவு செய்துவிட்டதைப் போல செயல்படுகிறீர்கள் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.
பிணை உத்தரவாதத்தை ஏற்க நீதிபதி கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கறிஞரை அழைத்து வருகிறோம் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரை அழைத்து வர உத்தரவிட்டு, வழக்கை சிறிது நேரத்திற்கு தள்ளி வைத்தார் நீதிபதி கார்த்திகேயன்.
பிணை உத்தரவாதம் ஏற்பு: செந்தில் பாலாஜிக்கு அவரது 2 உறவினர்கள் வழங்கிய 25 லட்ச ரூபாய்க்கான பிணை உத்தரவாதங்களை ஏற்க ஆட்சேபணை இல்லை என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி விடுதலைக்கான பிணை உத்தரவாதங்களை ஏற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்கும் உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் பிறப்பித்தார். அதைத்தொடர்ந்து சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கும் உத்தரவு இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டது. இதையடுத்து சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அவரை ஏராளமான திமுக தொண்டர்கள் வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications