விஜயகாந்த் மட்டுமல்ல.. பெரியார், எம்ஜிஆர், ஜெ... தமிழக தலைவர்கள் காவு வாங்கப்படும் கறுப்பு டிசம்பர்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதியான இன்று மரணமடைந்துள்ளார். அவரது மறைவு செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. டிசம்பர் மாதத்தில் பல அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் சேர்த்து பல தலைவர்கள் காலமாகியுள்ளதும், சுனாமி போன்ற சோக நிகழ்வுகள் டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்திருப்பதும் இந்த டிசம்பர் மாதத்தில்தான்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கடைசி இந்திய கவர்னர் ஜெனரலுமான ராஜாஜி என்றழைக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரி 1972-ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 25ஆம் நாளில் மறைந்தார்.
திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெரியார் ஈ.வி. ராமசாமி, 1973ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24ஆம்தேதி காலமானார்.
அதிமுகவின் நிறுவனத் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம். ஜி. ராமச்சந்திரன் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி திடீரென மறைந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்போதய முதல்வர் ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதியன்று இரவு 11.30 மணியளவில் காலமானார். டிசம்பர் 7-ஆம் தேதி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும், நடிகரும், நாடக ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார்.
இதே போல் பல பிரபலங்களின் மரண செய்தி மற்றும் பேரழிவுகள், கடந்த டிசம்பர் மாதங்களில் நிகழ்ந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தியா உள்பட பல தெற்காசிய நாடுகளை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய சுனாமி பேரலை தமிழகத்தில் பெரும் பாதிப்பையும், பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
கடந்த 2005ஆண்டில் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால், சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் போன்ற பல மாவட்டங்களிலும் பலர் உயிரிழந்தனர். டிசம்பர் 18-ஆம் தேதியன்று சென்னையில் ஒரு பள்ளியில் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உதவியை பெற கூடியிருந்த கூட்டத்தினரின் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் போன்ற பல தமிழக கடலோர மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை பெருமழை வெள்ளம் சூறையாடியது. எத்தனையோ உயிர்கள் பலியானது. லட்சக்கணக்கானோர் உடமைகள் சேதமடைந்தன.
இந்த சோகம் மறைவதற்குள்ளாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவினால் இன்று மரணமடைந்துள்ளார். பல தலைவர்களின் உயிரை காவு கொண்ட கறுப்பு மாதமாக உள்ளது டிசம்பர் மாதம்.


Click it and Unblock the Notifications
