சென்னை பயணிகளுக்கு மெகா இன்ப செய்தி.! இனி பெங்களூருக்கு சல்லுனு போகலாம் ஜாலியா! ரயில் செம வேகம்
சென்னை: சென்னை- பெங்களூர் இடையே வேகத்தை அதிகரிக்க ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போது பயண நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்திய ரயில்கள் மிகவும் மெதுவாக இயங்குவதாக விமர்சனங்கள் இருந்து கொண்டே இருந்தது. அதைப் போக்கும் வகையில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் இந்தியன் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாகப் பழமையாக இருக்கும் பாதைகளை மாற்றி அதிவேக பயணத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து வருகிறார்கள். வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் இதில் வேகமாகச் செல்ல முடிகிறது. நாடு முழுக்க இதனால் பல்வேறு பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பயண நேரம்: இதற்கிடையே இப்போது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே அனுமதிக்கப்பட்ட வேகம் என்பது மணிக்கு 110 கிமீ வேகத்தில் இருந்து 130 கிமீ வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் நாட்களில் சென்னையில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கான பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறையப் போகிறது. இங்குள்ள ரயில் பாதைகள் மற்றும் சிக்னல்கள் மேம்படுத்தப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை-அரக்கோணம் இடையே வேகத்தை அதிகரிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை இடையே வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாகக் குறையும்.. குறிப்பாகப் பெங்களூருக்கு செல்லும் ரயில்களின் பயண நேரம் கணிசமாகக் குறையும்.
எப்படி: இப்போது சென்னை பெங்களூர் இடையே வந்தே பாரத்தில் பயண நேரம் 4.25 மணி நேரமாக இருக்கும் நிலையில், இப்போது அது நான்கு மணி நேரமாகக் குறையும்.. சதாப்தி, பிருந்தாவன் விரைவு ரயில்களிலும் பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறைய உள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் அரக்கோணம்- ஜோலார்பேட்டை இடையே ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
இதன் மூலம் பெங்களூர் மட்டுமின்றி கோவை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, மங்களூர், மும்பை எனப் பல ரயில்களின் பயண நேரம் கணிசமாகக் குறையும்.. முதலில் சில ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு ஒவ்வொரு ரயிலின் வேகத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குறையும்: பெங்களூர் மற்றும் கோவைக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இவை இப்போது சென்னை- அரக்கோணம் இடையே மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட பாதை ஜோலார்பேட்டை வரை நீட்டிப்பட்டுள்ள நிலையில், இப்போது சென்னை முதல் ஜோலார்பேட்டை வரை ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கும்.
சென்னை பெங்களூர் இடையே ஆம்னி பேருந்துகளின் வேகமான சேவையை வழங்கி வரும் நிலையில், அதற்குப் போட்டி தரும் வகையில் ரயில் வேகத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் என்ன தான் வேகமாகச் சென்றாலும் ரயிலில் செல்வதைப் போன்ற சவுகரியம் அதில் வராது. எனவே, ரயில் வேகத்தை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
சென்னை - ரேணிகுண்டா கோட்டமும், சென்னை - கூடூர் கோட்டமும் கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த 2,000 கிமீ ரூட்டில் வேகம் அதிகரிக்கப்பட்ட நிலையில், 44 ரயில்களின் வேகம் கடந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் காலத்தில் மேலும் பல ரயில்களின் அதிகபட்ச வேகம் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications