சென்னை கடற்கரை - தாம்பரம் ரூட்டில் பயணிக்க போறீங்களா! பிளானை மாற்றுங்க.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில வாரங்களாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றும் 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
புற நகர் ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் 150 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேபோல், மெட்ரோ ரயிலும் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல அமைந்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். தாமதம் இன்றி சரியான நேரத்தில் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதால் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் பலரும் விரும்புவார்கள்.
வாராந்திர பராமரிப்பு பணி: அதிலும் பீக் நேரங்களில் மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும். ஒரு சில நிமிடங்கள் ரயில் தாமதம் ஆனாலும் கூட ரயில் நிலையங்களில் மூச்சு முட்டும் அளவுக்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு சென்னையில் புறநகர் மின்சார ரயில் பயன்பாடு பயணிகள் மத்தியில் அதிகம் உள்ளது.
சென்னையில் 4 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஓடுகின்றன. இதில் கடற்கரை தாம்பரம் இடையேயான வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும். அதனால்தான் இந்த வழித்தடத்தில் அதிக அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், கடந்த சில வாரங்களாகவே, பாராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் கணிசமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
44 மின்சார ரயில்கள் ரத்து: அந்தவகையில் 6-வது வாரமாக , பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் 44 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், " கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (மார்ச் 17) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
இதன் காரணமாக மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்: பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று காலை 11.55, 12.45, 1.25,1.45, 1.55, பிற்பகல் 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புற நகர் ரயில்கள் ரத்து காரணமாக பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் 150 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதேபோல், மெட்ரோ ரயிலும் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications