வேலுமணி ஆடிட்டர் எங்கே?.. வீட்டிற்கே சென்ற அதிகாரிகள்.. முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.. விசாரணை!
சென்னை: எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், அவரின் ஆடிட்டர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆடிட்டர் வீட்டில் நடந்த இந்த சோதனை பல்வேறு காரணங்களுக்காக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் ரெய்டுதான் தற்போது தமிழ்நாட்டின் ஹாட் நியூஸ். 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் இந்த ரெய்டு மொத்த அதிமுக தரப்பையும் ஆடிப்போக வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் வீட்டில், அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.
அதே நாள் அவருக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டது. அப்போதே அடுத்தடுத்த ரெய்டுகள் நடக்கும், மாஜி அமைச்சர்கள் கண்டிப்பாக குறி வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக கோவையை சேர்ந்த அதிமுக புள்ளிகள் கண்டிப்பாக குறி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்பு
நினைத்தபடியே தற்போது எஸ்.பி வேலுமணி குறி வைக்கப்பட்டுள்ளார். சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த ரெய்டு நடக்கிறது. கான்டிராக்டர் திருவேங்கடம் கொடுத்த புகார், திமுக ஆர்.எஸ் பாரதி வழக்கு மற்றும் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்குகளின் விளைவாக ரெய்டு நடக்கிறது.

ரெய்டு
எஸ்.பி வேலுமணியின் பல்வேறு வீடுகள், அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமான நபர்களின் அலுவலகங்கள், நண்பர்களின் நண்பர்கள், தொழில்முறையில் தொடர்பு கொண்டவர்கள், ஆடிட்டர் வீடு என்று ஒரு இடம் விடாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சல்லடை போட்டு, பக்கா முன்னேற்பாடு மற்றும் திட்டத்தோடு இந்த ரெய்டு நடந்து வருகிறது.

விசாரணை
இன்று சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும் நாள். இதில் அதிமுக கொறடா என்ற காரணத்தால் எஸ்பி வேலுமணி கலந்து கொள்வதற்காக சென்னையில் சட்டமன்ற இல்லத்தில் இருந்தார். அங்கேயே எஸ்.பி வேலுமணியை முடக்கிய அதிகாரிகள், அவரிடம் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் எஸ்.பி வேலுமணி மீது விசாரணை நடக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவரின் ஆடிட்டர் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது.

ஆடிட்டர்
சென்னை அபிராமபுரத்தில் எஸ்.பி வேலுமணியின் ஆடிட்டர் சலாம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 7 மணி அளவில் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது ஆடிட்டர் சலாம் வீட்டில் இல்லை. இதனால் ஆடிட்டர் சலாம் எங்கே சென்றார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையே இவர் எங்கே போனார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஏன் முக்கியம்?
அதே சமயம் ஆடிட்டர் சலாம் வீட்டில் இல்லை என்றாலும், அவரின் அறைகள், அலுவலகம், வீட்டு லாக்கர் அனைத்திலும் தீவிரமாக சோதனைகள் நடந்து வருகிறது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட முதல் கட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். பொதுவாக ஒரு முக்கியஸ்தர் லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை அல்லது ஈடி மூலம் குறி வைக்கப்படுகிறார் என்றால் தானாக அவரின் ஆடிட்டரும் விசாரணை வளையத்திற்குள் வந்து விடுவார்.

எல்லாம் தெரியும்?
ஆடிட்டர்களுக்குதான் அந்த நபரின் முழு பண பரிவர்த்தனை, வங்கி கணக்கு, நிதி நிலைமை விவரங்கள் தெரியும். ஆடிட்டரை பிடித்தால் மொத்த விவரங்களையும் எளிதாக "கறந்து" விடலாம். பொதுவாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களிடம் இருக்கும் விவரங்களை விட ஆடிட்டர்களிடம்தான் அதிகம் விவரங்கள், பைல்கள் இருக்கும். இதனால்தான் இன்றும் எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்த உடனே அவரின் ஆடிட்டர் சலாம் வீட்டிற்கு அதிகாரிகள் பறந்து உள்ளனர்.

ஆனால் வீட்டில் இல்லை
ஆனால் அவர் வீட்டில் இல்லாததை பார்த்து வீட்டில் இருந்த உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் பணி நிமித்தமாக வெளியே சென்றாரா அல்லது ரெய்டு வருவார்கள் என்பதை தெரிந்து கொண்டு வெளியே சென்றுவிட்டாரா என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இவர் எங்கே இருக்கிறார் என்று தெரிந்ததும், அவரிடம் தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

தொடக்கம்
அதிமுகவின் மிக முக்கியமான தலைகளில் ஒருவர்தான் எஸ்.பி வேலுமணி. இப்போது அவரே ரெய்டில் சிக்கி இருப்பதால் கட்சியின் மற்ற நிர்வாகிகள் தரப்பு கொஞ்சம் ஆடிப்போய்தான் உள்ளது. முக்கியமாக முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் கொஞ்சம் கலக்கத்தில் உள்ளனர். அடுத்த ரெய்டில் சிக்க போவது யார், ரெய்டு லிஸ்டில் இருக்கும் அடுத்த பெயர் யாருடையது என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

ரெய்டு தொடக்கம் எப்படி
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமியை நியமித்தார். ஸ்டிரிக்ட் அதிகாரியான இவர் இயக்குனர் ஆன போதே இதுபோன்ற அதிரடி ஆக்சன்கள் எதிர்பார்க்கப்பட்டது. அப்போதே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சில கோப்புகளை கந்தசாமி ஐபிஎஸ் வழங்கி இருந்தார். சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போதே முக்கிய நடவடிக்கைகள் வரும் நாட்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே தற்போது எஸ்.பி வேலுமணிக்கு எதிராக ரெய்டு பாய்ந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications